எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகப் பேசும் மாபா.பாண்டியராஜன்

கூடங்குளம் மற்றும் ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டங்களில் அந்நிய சக்திகள் இருப்பதாகவும் அவை நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காக செயல்படுவதாகவும் சொல்லியிருக்கிறார் தமிழக அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்.

இதற்கு எதிர்வினையாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன் எழுதியுள்ள பதிவில்…..

அமைச்சருக்கு ஒரு வார்த்தை, இப்படிச் சொல்லும் முதல் நபர் நீங்கள் அல்ல. உங்களுக்கு முன்னரே மன்மோகன் சிங், ப.சிதம்பரம், நாராயணசாமி, பா.ஐ.கவைச் சேர்ந்த பொன்னார், பிரதமர் மோடி என நிறையப் பேர் சொன்ன பொய்களையே நீங்கள் இப்போது மீண்டும் சொல்லியிருக்கிறீர்கள்.

இதுவரை, அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு போராட்டம் நடத்தியதாக ஒருவர்மீது கூட வழக்கு பதிசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது கிடையாது.

இப்போது மட்டுமல்ல, எப்போதும் அரசு கொண்டுவரக்கூடிய திட்டங்களை கேள்விகேட்பவர்கள் மீது இதைப்போன்ற அவதூறுகளை அள்ளிவீசுவது அதிகாரத்தின் மீதிருப்பவர்களின் பொழுதுபோக்கு.

நர்மதா அணைக்கு எதிராக “மேதா பட்கர்” தலைமையில் மக்கள் திரள் போராட்டங்கள் தொடங்கிய சமயத்திலேயே அவர்மீது “அந்நிய நாட்டின் கைக்கூலி” என்கிற பட்டத்தை சுமத்தினர், ஆனால் இதுவரை நர்மதை அணை யாருக்கு பலன் தந்தது என்கிற கேள்விக்கான விடை யாரிடமுமில்லை.

கூடங்குளம் அணுவுலைகள், உலகத்தில் எந்த உலைகளிலும் நடைபெறாத வகையில் ஏன் 52 முறை பழுடைந்து நின்றுள்ளன என்கிற கேள்விக்கும் யாரும் பதில் சொல்லவில்லை. ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை ஏன் உப்பாற்றில் கொட்டினார்கள் என்கிற கேள்விக்கு இன்னும் பதிலில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுதான் நிலை. பூச்சிக்கொல்லிகளால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது, தேனீக்கள் செய்யும் மரகந்த சேர்க்கையில் மாற்றம் வருகிறது என்று அறிவியல்பூர்வமாக நிரூபித்தார் அமெரிக்காவைச் சேர்ந்த ரேச்சல் கார்ல்சன். மனநலன் பாதிக்கப்பட்டவர் என்று ரசாயன தொழில் நிறுவனங்கள் அவரைத் தூற்றின. கற்களை கொண்டு தாக்கப்பட்டார், ஆனால் சில ஆண்டுகளில், உலகம் அவர் சுட்டிக்காண்பித்த வேதியல் பொருளை தடைசெய்தது. வரலாற்றில் ரேச்சல் கார்சனை தூற்றியவர்கள் போன இடம் தெரியவில்லை
நடந்து முடிந்த சென்னை புத்தககாட்சியில், அவரின் “மௌன வசந்தம் புத்தகம்” அதிகமாக விற்றுத்தீர்ந்தது.

மேதா பட்கரை தூற்றியவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாது ஆனால் இன்றளவும் “மேதா” மக்கள் பிரச்சனைகளுக்காக வீதிகளில் நிற்கிறார்.

கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்களைக் கேவலப்படுத்திய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை ஆனால் இன்றளவும் தமிழக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துவருகிறார் சுப.உதயகுமார்,

கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட மக்கள் எழுச்சியால், குஜராத் முதலமைச்சர், அந்த மாநிலத்தில் அணு உலைகளை அமைக்க அனுமதிக்கமாட்டோம் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கிறார்.

நீங்கள், இதிலிருந்து ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்: மக்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், அவதூறு பேசியவர்கள் வரலாற்றின் பக்களிலிருந்து கிழித்து எறியப்பட்டுள்ளார்கள், மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களை வரலாறு தன்னுடைய “நாயகர்களாக” வெளிக்காட்டிகொண்டேவருகிறது.

அந்நிய நாடான ரஷியாவிலிருந்து வாங்கப்பட்ட அணு உலைகளும், லண்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா நிறுவனமும் உள்ளூர் சார்ந்த விஷயங்களாக தெரியும் உங்களுக்கு, உங்கள் சொந்த மண்ணைச் சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், நெல்லை மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மக்கள் அந்நியர்களாகத் தெரிந்தால் நீங்கள் யார் என்கிற கேள்விதான் மக்கள் மனங்களில் எழுகிறது.

நீங்கள் அமைச்சராக இருக்கும் அமைச்சரவையை தலைமைதாங்கும் முதல்வர் எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கமாட்டோம் என்கிறார். நீங்கள் யாருடைய குரலாக ஒலிக்கிறீகள் என்கிற கேள்வியும் எழாமலில்லை.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response