அண்மையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்கவகையில் ஐந்து நாள், ஒருநாள் தொடர்களைக் கைப்பற்றிய இந்திய மட்டைப் பந்தாட்ட அணி, அடுத்த சாதனை படைப்பதற்காக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றுள்ளது.
நியூசிலாந்தில் 3 வாரங்கள் இருக்கும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி 20 போட்டித்தொடர்களில் விளையாடவுள்ளது.
முதல் போட்டி ஆக்லாந்தில் சனவரி 23 ஆம் தேதி நடைபெறுகிறது. 26, 28 ஆம் தேதிகளில் தாரங்காவிலும், 31 ஆம் தேதி ஹேமில்டனில் 4 ஆவது போட்டியும், பிப்ரவரி 3 ஆம் தேதி வெலிங்டனில் கடைசிப் போட்டியும் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது.
டி20 போட்டிகள் வெலிங்டனில் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் போட்டியும், ஆக்லாந்தில் 8 ஆம் தேதி 2 ஆவது போட்டியும், ஹேமில்டனில் 10 ஆம் தேதி 3ஆவது போட்டியும் நடைபெற உள்ளது.
டி20 போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி நண்பகல் 12.30 மணிக்குத் தொடங்கும்.
இதற்காக நியூஸிலாந்து சென்ற இந்திய அணியினரை ஆக்லாந்து விமானநிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தனர். விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சென்றார். இது தொடர்பாக பிசிசிஐ அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது.
நியூசிலாந்தில் இதுவரை பயணம் மேற்கொண்டு 7 ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடியுள்ளது. அதில் ஒருமுறை மட்டும் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இருமுறை தொடரை சமன் செய்துள்ளது. 4 முறை நியூசிலாந்து தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில், இந்த முறை ஆஸ்திரேலியாவில் சாதித்ததுபோன்று, நியூசிலாந்திலும் வெற்றிக்கொடி நாட்டும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.