நாலரை ஆண்டுகளில் நாட்டின் கடன் 50 விழுக்காடு அதிகரிப்பு – மோடிக்குப் பெரும் பின்னடைவு

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் 50 விழுக்காடு உயர்ந்து, ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ள அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் கடன் குறித்த 8 ஆவது ஆய்வறிக்கையில் இந்தத் தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாட்டின் கடன் ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது. அதன்பின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று, பிரதமர் மோடி வந்தபின் நாட்டின் கடன் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாத கணக்கின்படி ரூ.82 லட்சத்து 3 ஆயிரத்து 253 கோடியாக அதிகரித்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசின் கடன் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அரசின் கடன் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் பொதுக்கடனாகும். பொதுக்கடன் ரூ.48 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 51.7 விழுக்காடு உயர்ந்து, ரூ.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. உள்நாட்டுக் கடன் 54 விழுக்காடு அதிகரித்து ரூ.68 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

சந்தையில் மத்திய அரசு கடன் பெற்ற அளவும் 47.5 விழுக்காடு அதிகரித்து, ரூ.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தங்கவிற்பனை பத்திரத்தின் மூலம் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஏதும் இல்லை ஆனால், தற்போது ரூ.9 ஆயிரத்து 89 கோடி வந்துள்ளது.

மத்திய அரசின் ஒட்டுமொத்த கடனும் நடுத்தரகாலக் கடனாகவும், மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் சந்தையில் கடன் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும், நிதிப்பற்றாக்குறையை தொடர்ந்து குறைக்க முடியாத சூழலே நிலவுகிறது. நடப்பு நிதியாண்டில் முதல் 8 மாதங்களில் அதாவது நவம்பர் மாதம்வரை, நாட்டின் நிதிப்பற்றாக்குறை ரூ.7.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 114.8 விழுக்காடு அதாவது அரசு ஒரு ஆண்டுக்கு நிர்ணயித்துள்ள ரூ.6.24 கோடியைக் காட்டிலும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கை மோடி அரசுக்குப் பெரும் பின்னடைவு என்று சொல்லப்படுகிறது.

Leave a Response