
நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி நேற்று பேசியதாவது….
இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் அரசாங்கம் பாரத மாதாவை விற்றுவிட்டது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு விவசாயிகளின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டு மொத்தமாக சரண் அடைந்து விட்டனர்.
பிரதமர் மோடியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சிறிதுகாலத்திற்கு முன்பு போர் சகாப்தம் முடிந்துவிட்டது என்று கூறினா்.ஆனால் உண்மையில், நாம் போர் சகாப்தத்திற்குள் நகர்கிறோம்.உக்ரைனில் போர் நடக்கிறது,காசாவில் போர் நடக்கிறது,மத்திய கிழக்கில் போர் நடந்து வருகிறது,ஈரானில் போர் அச்சுறுத்தல் உள்ளது.நம்மிடம் இன்னும் ஆபரேஷன் சிந்தூர் உள்ளது.நாம் ஒரு ஆபத்தான உலகத்திற்குள் நகர்கிறோம்.நமது பலங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்,மேலும் நமது நாட்டின் மையபலம் நமது மக்கள்தான்.நாட்டின் மக்கள், தரவு,உணவு வழங்கல் மற்றும் எரிசக்தி அமைப்பைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
உண்மையிலேயே இந்தியா கூட்டணி அரசு இப்போது இருந்து,அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால்,அது அதிபர் டிரம்பிடம் அவர் இந்தியாவை சமமாக நடத்த வேண்டும் என்று கூறியிருக்கும்.இந்த சமன்பாட்டில் மிக முக்கியமான சொத்து இந்தியதரவுகள் என்பதை நாங்கள் (டிரம்பிடம்) முதலில் கூறுவோம். அமெரிக்கா டாலரைப் பாதுகாக்க விரும்பினால்,இந்திய தரவு மிகப்பெரிய சொத்து என்பதை அது அங்கீகரிக்க வேண்டும்.இரண்டாவதாக,நீங்கள் அதை அணுக விரும்பினால், நீங்கள் எங்களுடன் சமமாகப் பேசுவீர்கள், நாங்கள் உங்கள் ஊழியர்கள் போல் எங்களுடன் பேசக்கூடாது என்று நாம் அதிபா் டிரம்பிடம் கூறுவோம்.
இந்தியா கூட்டணி அரசாங்கம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து பேரம் பேசமுடியாது. நாங்கள் எங்கள் எரிசக்தி பாதுகாப்பைப் பாதுகாக்கப் போகிறோம் என்றும் டிரம்பிடம் கூறியிருக்கும். மூன்றாவது விஷயம், உங்களிடம் விவசாயவளம் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,நீங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும், ஆனால் நாங்கள் எங்கள் விவசாயிகளையும் பாதுகாப்போம் என்று டிரம்பிடம் கூறியிருப்போம்.இந்தியா கூட்டணி அரசாங்கம் தகவல்கள் நமது மிகப்பெரிய பலம் என்று கூறும்.இப்போது நாம் பேசுவோம்.சமமாக பேச்சுவார்த்தைக்கு அங்கு செல்வோம்.நாங்கள் பாகிஸ்தானுக்கு சமமாக இருக்கமாட்டோம்.பாகிஸ்தான் இராணுவத் தலைவர் அவருடன் காலை உணவு சாப்பிடுவார் என்று டிரம்ப் முடிவு செய்தால்,அதைப்பற்றி எங்களுக்கு ஏதாவது சொல்லவேண்டும்.
மோடி அரசு எரிசக்தி மற்றும் ஆயுதமயமாக்கல் பற்றிப் பேசுகிறது.ஆனால் நமது நிதி மற்றும் நமது ஆற்றலை நமக்கு எதிராக அமொிக்கா ஆயுதமாக்க அனுமதித்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மூலம்,விவசாயிகளின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டுள்ளது,ஜவுளித் துறை அழிக்கப்பட்டுள்ளது,எரிசக்தி பாதுகாப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது ஒரு மொத்த சரணடைதல்.இது ஒரு சோகம்.ஏனெனில் இது பிரதமரின் சரணடைதல் மட்டுமல்ல;140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம்,பிரதமர் மோடி சரணடைய வைத்துள்ளார்.
அமெரிக்காவில் ஒரு வழக்கு இருக்கும்.பாஜகவின் நிதிக்கட்டமைப்பைப் பாதுகாக்க விரும்பியதால் அவர் சரணடைந்துள்ளார்.நாம் கொந்தளிப்பான காலகட்டத்தை நோக்கிச் செல்கிறோம்,தேசமே விற்றுத் தீர்ந்துவிட்டது. அதன் தரவுகள் விற்கப்பட்டுள்ளன,அதன் விவசாயிகள் விற்கப்பட்டுள்ளனர்,எங்கள் அனைத்து மென்பொருள் பொறியாளர்களும் விற்கப்பட்டுள்ளனர்.சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் விற்கப்பட்டுள்ளன,எங்கள் படைகள் மற்றும் எங்கள் எரிசக்தி பாதுகாப்பு விற்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் வர்த்தக விதிகள் மீதான கட்டுப்பாட்டை கைவிட்டுள்ளது,தரவு உள்ளூர்மயமாக்கலை நீக்கியுள்ளது, அமெரிக்காவிற்கு தரவு சுதந்திரமாக செல்ல அனுமதித்துள்ளது,டிஜிட்டல் வரியை கட்டுப்படுத்தியுள்ளது.மூலக் குறியீடு வெளிப்படுத்தலைத் தள்ளுபடி செய்துள்ளது.பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 20 ஆண்டு வரி விடுமுறைகளை வழங்குகிறது.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக,நமது விவசாயிகள் ஒரு புயலை எதிர்கொள்கின்றனர்.ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இயந்திரமயமாக்கப்பட்ட அமெரிக்க பண்ணைகளுக்கு நீங்கள் கதவைத் திறந்துவிட்டீர்கள்,இது எங்கள் சிறுவிவசாயிகளை நசுக்குகிறது.இது அவமானகரமானது,உங்களுக்கு முன்போ அல்லது உங்களுக்கு பின்னரோ எந்த பிரதமரும் இதைச் செய்யமாட்டார்கள்.
பிரதமர் மோடி இந்த அளவுக்கு சரண் அடைந்த பிறகும் அமெரிக்க வரி குறையவில்லை.டிரம்ப் வரி விதிப்பதற்கு முன்பு ஆரம்பத்தில் இந்தியபொருட்களுக்கு சராசரியாக 3 சதவீத வாி இருந்தது.ஆனால் இப்போது அது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.ஆனால் வா்த்தக ஒப்பந்தத்திற்கு பிறகு அவர்கள் வரி 16 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இறக்குமதிகள் ரூ.4 இலட்சம் கோடியில் இருந்து இனிமேல் ரூ.45 இலட்சம் கோடியாக உயரும். இது அபத்தமானது.
மோடி உட்பட எந்த இந்திய பிரதமரும் அத்தகைய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. அவர் (மோடி) ஏன் இந்தியாவை விற்றார். ஏனென்றால் அவர்கள் (அமெரிக்கா) அவரை நெரிக்கிறார்கள்.அவர்கள் அவரது கழுத்தில் ஒரு பிடியைக் கொண்டுள்ளனர்.தற்காப்புக் கலைகளில் ஒரு பிடியைப் பெற்ற பிறகு,அடுத்த படி மூச்சுத்திணறல்,பின்னர் எதிராளி கைவிடத் தட்டுவதுதான் நடக்கிறது.
தற்போது நடந்துள்ள இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு போய்விட்டது. இனி நாம் யாரிடமிருந்து எண்ணெய் வாங்குகிறோம் என்பதை அமெரிக்கா தீர்மானிக்கும். அதை நமது பிரதமர் முடிவு செய்ய மாட்டார். அவர்கள் கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே இராகுல்காந்தி பேசும் போது….
மிகவும் முக்கியமான விசயம், பிரதமர் பலன் இல்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப்பிடித்து இருக்கிறார்கள்.அதனால் பிரதமர் கண்களில் பயம் ஏற்பட்டுள்ளதைக் காணலாம்.ஒன்று அதானி மீதான அமெரிக்காவின் வழக்கு.மற்றொன்று இன்னும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள எப்ஸ்டீன் பைல்.அதில் 30 இலட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை.அதுவே பிரதமரின் பயத்திற்குக் காரணம்.தொழில் அதிபர் அனில்அம்பானி ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.காரணம் எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது.அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியிடம் நான் கேட்கிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும். ஹர்தீப்சிங் பூரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்கு தெரியும்
இவ்வாறு அவர் கூறினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி…
நான் சர்வதேச அமைதி நிறுவனத்தில் பணியாற்றியபோது,அதன் தலைவர் டெர்ஜே ரோட்-லார்சன் மூலம் எப்ஸ்டீனை சந்தித்தேன்.ஒட்டுமொத்தமாக 3 அல்லது அதிகபட்சம் 4 முறை மட்டுமே அவரைச் சந்தித்துள்ளேன்.
அதுவும் ஒரு தூதுக்குழுவின் ஒரு பகுதியாகவே அந்தச் சந்திப்புகள் நடைபெற்றன. அவரது குற்றச் செயல்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார்.


