
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி வெளியிட்டுள்ள காணொலி செய்தி….
வணக்கம். இந்தத் தேர்தல் திமுக, காங்கிரசு கூட்டணிக்கும், பா.ஜ.க – அதிமுக கூட்டணிக்கும் ஒரு கொள்கை ரீதியான மோதல் ஆகும்.அதிமுகவை பா.ஜ.க தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து,அதன்மூலம் தமிழ்நாட்டிற்குள் கால்பதித்து விடலாம் என்றும்,அதன்மூலம் தமிழ்நாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும்,தமிழ் மொழியையும் அழித்து விடலாம் என நினைக்கிறது.
அதிமுக தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பா.ஜ.கவுக்கு இணக்கமாக இருக்கிறார்கள்.காரணம் அவர்கள் செய்த ஊழல்.மிகச்சரியாக சொல்லவேண்டும் என்றால் டிரம்ப்புக்கு மோடி சமரச நிலையில் இருக்கிறார். அதேபோல் மோடிக்கு அதிமுக சமரசமாக உள்ளது.அவர்கள் தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆள நினைக்கிறார்கள்.எங்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டை தமிழ்நாடு மக்கள் ஆளவேண்டும்,பஞ்சாயத்துகள் மூலம் ஆளவேண்டும்,சட்டப்பேரவை மூலம்,மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் மூலம் ஆளவேண்டும் என்று நினைக்கிறோம்.
தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமைமிக்க சமூகநீதி காங்கிரசு- திமுக கூட்டணிக்கு உள்ளது.காமராஜரால் நிலைநிறுத்தப்பட்ட சமூகநீதி, திமுக- காங்கிரசு கூட்டணியால் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. எங்கள் அரசு பெண்களுக்கு, இளைஞர்களுக்கு, முதியவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. எனவே தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
அனைத்து காங்கிரசு தொண்டர்களும் திமுக வேட்பாளர்களுக்கு உதவவேண்டும்.கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் உதவவேண்டும்.அதேபோல் கூட்டணிக் கட்சியினரும் காங்கிரசு வேட்பாளர்களுக்கு
உதவவேண்டும்.
தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான ஒரு பெருமைமிகு வரலாற்றைக் காங்கிரசு -திமுக கூட்டணி கொண்டுள்ளது. அதனை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.தமிழ்நாடு மக்களுக்கு எனது செய்தி: உங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும்.உங்கள் மொழியைப் பாதுகாக்க வேண்டும். உங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


