
தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றுள்ளது. எனினும் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களில் தவெக வெல்லாததால், தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை உருவாகியது.
திமுக ஆதரவில் வெற்றி பெற்ற காங்கிரசுக் கட்சி, தவெகவுக்கு முதலில்சென்று ஆதரவு கொடுத்தது. காங்கிரசின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்த போதும், ஆட்சி அமைக்க பெரும்பான்மை காட்ட வேண்டும் என்று ஆளுநர் கூறிவிட்டார்.இதனால் எல்லாக் கட்சிகளிடமும் ஆதரவு கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார் விஜய்.
இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையில், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரசுக் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியும், ஒரு மாநிலங்களவை பதவியும் என்று பேசப்பட்டதாம்.
ஒரு அமைச்சர் பதவி என்றதும்,அதைக் கைப்பற்ற காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இது பகிரங்கமாக வெடித்த நிலையில் தவெகவை ஆதரித்தது தவறு என்று ஒரு சில உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியதாகத் தகவல் வெளியானது.
இதையறிந்ததும், காங்கிரசு உறுப்பினர்களில் இருவரை வளைத்துப் போடும் வேலையில் அதிமுக இறங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்காக 2 உறுப்பினர்களிடம் இரகசிய பேச்சு நடத்தப்பட்டதாகவும் வதந்திகள் பரவியது.
இந்தத் தகவலை அறிந்த காங்கிரசு தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. குதிரை பேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிக்குவதைத் தடுக்க உடனடியாக அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடிவு செய்தது. சென்னையில் அவர்களை வைத்திருப்பது பாதுகாப்பானதாக இல்லை என்று கருதி,அவர்களை உடனடியாக காங்கிரசு ஆளும் மாநிலமான தெலங்கானாவுக்குச் செல்ல உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் காங்கிரசு உறுப்பினர்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமார், தாரகை கத்பட், ஜமால் முகமது ஆகிய உறுப்பினர்கள் புறப்பட்டுச் சென்றனர். பிரவீன் என்ற காங்கிரசு உறுப்பினர் இவர்களுடன் செல்லவில்லை. அவர் தனியாகச் செல்கிறாரா என்ற தகவல் வெளியாகவில்லை. அவர் ஏற்கனவே பெங்களூர் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கைபேசிகளை அணைத்து வைக்கவும் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வுகள், அரசியல்ரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


