
பெரும்பான்மையை மெய்ப்பிக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற நடிகர் விஜய் போராடிக் கொண்டிருக்கிறார்.நேர்வழியில் அது கிடைக்கவில்லை என்றதும் குறுக்குவழியில் சென்று அமமுக சட்டமன்ற உறுப்பினரைக் கடத்திச் சென்று பேரம்பேசி அவரிடமிருந்து கடிதம் பெற்றதாகச் சொல்லி ஆளுநரிடம் தவறான தகவலை அளித்தார் என்கிற திடுக்கிடும் குற்றச்சாட்டு விஜய் மீது உள்ளது.
இந்நிலையில்,நேற்றுமாலை மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்தார்.அப்போது அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியானது.
உடனே அமமுக பொதுச்செயலாளர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.அதில்…
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காமராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார்.
எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்களும்,பத்திரிகைகளும் தங்களின் கடமையையும்,பொறுப்புணர்வையும் உணர்ந்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்திருந்தார்.
அதோடு நில்லாமல், தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் காமராஜைத் தொடர்பு கொள்ள முடியாத சூழல் உருவான உடனேயே, த.வெ.க “குதிரை பேரம்” மற்றும் “ஆவண மோசடியில்” ஈடுபடுவதாக ஆளுநரிடம் டிடிவி தினகரன் முறைப்படி புகார் அளித்தார்.
அதோடு நில்லாமல்,அமமுக என்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பக்கமே நிற்கும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, ஆதரவுக் கடிதத்தை உடனடியாகச் சமர்ப்பித்து த.வெ.க-வின் திட்டத்தைத் முறியடித்தார்.
த.வெ.க-வின் உரிமை கோரலை “ஜனநாயகக் கேலிக்கூத்து” என அவர் விமர்சித்ததன் விளைவாக, விஜய் தரப்பின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார்.
இறுதியில்,த.வெ.க ஒரு காணொலி வெளியிட்டது.அதில் காமராஜ் எழுதி கையெழுத்து போடுவது போல் இருந்தது.அந்த காணொலியே அவர்களுக்கு எதிரான ஆதாரமாக மாறிப்போக, எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்ட த.வெ.க-வின் அரசியல் நகர்வு தோல்வியில் முடிந்தது.
தமிழ்நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ள இந்த நிகழ்வுகளில்,
சில மணி நேரங்களில் ஆளுநரைச் சந்தித்தது, மாயமான சட்டமன்ற உறுப்பினரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தது எனத் திட்டமிட்டுச் செயல்பட்டதன் மூலம், த.வெ.க-வின் ஆட்சி அமைக்கும் கனவைத் தகர்த்து, ஒரு “குதிரை பேர” முயற்சியை அவர்களுக்கே அரசியல் ரீதியான பின்னடைவாக மாற்றிக் காட்டியுள்ளார் டிடிவி தினகரன். இது அரசியல் வியூகங்களுக்கு ஒரு சிறந்த பாடமாகும் என்றும் டிடிவி.தினகரன் நேற்றிரவு கொடுத்த ஒரேபேட்டியில் விஜய்யின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி ஒட்டுமொத்த பிம்பத்தைச் சிதைத்துவிட்டார் என்று அவருக்குப் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் விஜய் இப்படி மோசடி செய்கிறாரே என்று மக்கள் அதிர்ச்சி தெரிவித்துவருகின்றனர்.


