
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது.இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் வேண்டும்.
விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது.ஆனால்,பெரும்பான்மைக்கு இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.விஜய் 2 தொகுதிகளில் வென்றுள்ள நிலையில் ஒன்றிலிருந்து விலக வேண்டும்.இதனால் தவெகவின் பலம் 107 ஆக குறைவதோடு பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர்களின் பலம் 11 ஆக அதிகரிக்கும்.
இந்நிலையில், 11 உறுப்பினர்களின் ஆதரவு பெற விஜய் பல கட்சிகளுடன் பேசி வருகிறார்.
காங்கிரஸசு 5, 2 கம்யூனிஸ்ட் கட்சிகளின் 4 உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.ஆனாலும் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 2 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜிடம் தவெகவினர் ரூ.100 கோடி வரை தருவதாக ஆசைவார்த்தை கூறி அவரை தவெக நிர்வாகிகள் கடத்திச் சென்றுள்ளதாக புகார் எழுந்தது பெரும்பரப்பை ஏற்படுத்தியது.
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தவெகவுக்கு ஆதரவு தருவதாக கடிதம் கொடுத்ததாகவும், அந்தக் கடிதத்தை ஆளுநரிடம் விஜய் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தான் ஏற்கனவே 2 தொகுதியில் வெற்றி பெற்றதால், அதையும் சேர்த்து தனக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகவும் விஜய், ஆளுநரிடம் தெரிவித்தார்.
தவெக தரப்பில் இருந்து அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜை கடத்திச் சென்றதாக தகவல் வெளியான நிலையில் நேற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,ஆளுநரைச் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜின் உண்மையான ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக எங்கள் எம்எல்ஏ எஸ்.காமராஜ் கையெழுத்துப் போட்டு, உதவியாளர் மூலம் மாலை 6.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து எனக்குக் கொடுத்தனுப்பினார். அதில் நானும் கையெழுத்துப் போட்டிருந்தேன்.அதற்குள் போலியான கடிதங்களைக் கொடுத்து தவெகவிற்கு ஆதரவு என ஊடகங்களில் செய்தி வருவதைப் பார்த்து உடனடியாக ஆளுநரைச் சந்திக்க அனுமதி கேட்டு ஒரிஜினல் கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு மற்றொரு நகலை எடுத்து வந்துள்ளேன்.
இது குதிரை பேரமாக இருக்கலாம்,எம்எல்ஏவுக்கு போன் செய்தால் எடுக்கவில்லை அல்லது போனை பிடுங்கி வைத்துள்ளார்களா என்று தெரியவில்லை,தொடர்பு கொள்ள முடியவில்லை.இது போர்ஜெரியாக இருக்கலாம், கவர்னரிடம் கூறியுள்ளேன்.எம்எல்ஏ கடிதத்தை நான் ஆளுநரிடம் கொடுப்பதற்குள் அமமுக ஆதரவு என போலி கடிதத்தை தவெக தந்துள்ளது.எனவே தவெக தலைவர் விஜய் வழங்கிய ஆதரவு கடிதங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். கடிதத்தில் கையெழுத்துப் போடும் போது என்னிடம் பேசினார், அதன்பிறகு வெளியில் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் காணவில்லை.
தூய்மையான அரசு தருவேன் என்று கூறிவிட்டு முதல்நாளே குதிரை பேரத்தில் ஈடுபடுவது சரியா? விஜய்க்கு ஆதரவாக கடிதம் வந்துள்ளதால் அவர்கள்தான் பண்ணியிருப்பார்கள்.
திமுக அணியில் இருந்து வெற்றி பெற்று விட்டு வேறு ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுப்பது எப்படி, காங்கிரசு ஒரு முன்னுதாரணமான தவறுகளை செய்துள்ளது.
நான் தூயசக்தி என்று கூறிவிட்டு திமுக அணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுகளைப் பெற்றால் தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள். இது குதிரை பேரமாகதான் இருக்கும்.மன்னார்குடி காமராஜ் விஜய்க்கு எத்தனை வருடம் பழக்கம்,ஆட்சி நடத்துவதற்கு ஊழல் பண்ணும் விஜய் நல்லாட்சியை எப்படிக் கொடுப்பார்?
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
இந்தச் சூழலில் நள்ளிரவு 12 மணி அளவில் அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், ஆளுநர் மாளிகைக்கு வந்தார். தொடர்ந்து டிடிவி தினகரனும் அங்கு வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது….
வாட்ஸ்அப்பில் காமராஜ் ஆதரவு தெரிவித்துள்ளதாக சொல்லி போலி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதற்கும் எங்கள் கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.அந்தக் கடிதத்தை தவெக தரப்பினர் ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். ஆட்சி அமைக்கவே இப்படி மோசடி செய்தால்,ஆட்சி அமைத்தால் தமிழகம் என்னவாகும்? இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்க உள்ளோம் என்றார்.
விஜய்,ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கடத்திச் சென்று பேரம்பேசியதோடு ஆளுநரிடம் போலிக்கடிதம் கொடுத்ததாகச் சொல்லப்படும் இந்தக் குற்றச்சாட்டு பெரும் அதீர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


