
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே திமுக கூட்டணியிலிருந்து விலகி விஜய் கட்சிக்கு ஆதரவு கொடுத்தது காங்கிரசு.அக்கட்சியின் இந்தச்செயல் கடும்விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.காங்கிரசுக் கட்சியினரே இதை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். காங்கிரசைச் சேர்ந்த மணிசங்கர் அய்யர் இதுகுறித்து ஒரு நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரை….
அண்மையில் நடந்த முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசு 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றுள்ளது. இந்த வெற்றி காங்கிரசுக் கட்சியின் சொந்தபலத்தால் கிடைத்துவிடவில்லை.திமுக
கூட்டணியால்தான் சாத்தியமானது.நான் எம்.பி.யாக இருந்த மயிலாடுதுறை திமுக கூட்டணிக்கு எஃகுக்
கோட்டையாக இருந்துள்ளது.காரணம் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத்
தொகுதிகளில் 5 இடங்களை திமுக கூட்டணிக் கட்சிகள் வென்றுள்ளன.இரண்டு இடங்கள் திமுகவுக்கும்,தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,காங்கிரசுக் கட்சிகளுக்கு தலா ஓர் இடமும் கிடைத்துள்ளன.அதாவது 5
தொகுதிகளில் விஜய்யின் தவெகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.
எனவே,மக்கள் தீர்ப்பு திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் தவெகவுக்கு எதிராகவும் அமைந்திருப்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.கடந்த 35 ஆண்டுகாலமாக தனித்துவமிக்க மயிலாடுதுறை தொகுதியுடன் கொண்ட என் தொடர்பின் பின்னணியிலிருந்தே இதனை ஆழ்ந்த வருத்தத்துடனும் துயரத்துடனும் தெரிவிக்கிறேன்.
அதேநேரத்தில்,மாநில அளவிலான மக்கள் தீர்ப்பு,திமுக-அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கு எதிராகவும், விஜய்யின் தவெகவுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது என்பது உண்மையே.விஜய் முற்றிலும் மதச்சார்பற்றவர்
என்பதும்,பரந்த திராவிட ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டவர் என்பதும் உண்மைதான்.அதில் எள்ளளவும் சந்தேகம்
இல்லை.ஆனால்,நீண்டகால நம்பகமான கூட்டணிக்கட்சியை காங்கிரசு இப்படி திடீரென்று கைவிடுவது மலிவான சந்தர்ப்பவாத அரசியல் வாசனையை வீசுகிறது.சந்தர்ப்பவாதம்தான் சாணக்கிய அரசியலின் சாரம்.
ஆனால்,அது காந்தியின் காங்கிரசின் உண்மை அரசியல் அல்ல.இந்திய தேசிய காங்கிரசின் மூதாதையர்கள்
இத்தகைய சந்தர்ப்பவாத,மலிவான அரசியலை ஏற்றுக்கொள்வார்கள் என்று என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.மேலும்,எப்போதும் எதார்த்தவாதியான ஜவகர்லால் நேருவும் சந்தேகப்பட்டிருப்பார்.நீண்டகாலமாக கொந்தளிப்பான காலங்களிலும் நம்முடன் நின்ற,நெருக்கடியில் உறுதியாக இருந்த ஒரு நேர்மையான கூட்டணிக் கட்சியை மே 4 ஆம் தேதி வரை நாம் இகழ்ந்த ஒருவருக்காகக் கைவிடுவது என்பது அரசியல்ரீதியில்
அர்த்தமுள்ளதா? நெறிமுறையானதா? அரசியல் ரீதியில் கூட புத்திசாலித்தனமானதா?
இந்தக் கேள்விகளோடு தவிக்கும்போது,போட்டி முடிந்தபின் குதிரையை மாற்றிக் கொள்ளும் இந்தச்செயல் என்னில் ஆழ்ந்த அமைதியின்மையை ஏற்படுத்துகிறது.இத்தகைய சந்தர்ப்பவாத மாற்றத்தில்,மகாத்மா காந்தி
கற்றுக்கொடுத்தது போல நன்னடத்தை,தன்னடக்கம்,தியாகம் ஆகியவற்றால் தூண்டப்படாமல்,அரசியலின்
எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தாலும் உடனடிப் பலனை நோக்கி நகர்கிறோம் என்பது தெளிவாகிறது.
இந்தியா கூட்டணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருவர் மட்டுமே ‘சகோதரர்’ இராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று பிரகடனப்படுத்தினார்.அந்த நண்பரை இவ்வாறு திடீரெனக் கைவிடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? மேலும்,ஒருவர் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது,கரைசேர வேண்டும் என்பதற்காக,அந்த
மூழ்கடிப்புக்கே பொறுப்பான நபரோடு…ஓர் அமைச்சர் அல்லது இரண்டு அமைச்சர் பதவிக்காக நமது கவுரவத்தை விற்றுவிடுவதா? மிக எதார்த்தமாகச் சிந்தித்தாலும்,நாம் நிலையான ஒரு கப்பலில் சேருகிறோமா? அல்லது
மூழ்கும் கப்பலில் ஏறும் எலியாக மாறுகிறோமா?
என்னைப் பொறுத்தவரை,நெருக்கடியான நேரங்களில் கூட நெறிமுறையும் அரசியலும் ஒன்றிணைகின்றன.நமது மிகக்கடினமான காலங்களிலும் திமுக நம்முடன் உறுதியாக நின்றது.எனவே,அவர்களுடன் கூட்டணியைத்
தொடர்வதுதான் நெறிமுறை.திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆசிய அளவில் மிக உயர்ந்த
இடத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.
சில ஆண்டு காலம் காத்திருந்து,2029 அல்லது 2031 இல் யாரைக் கூட்டணிக்குத் தேர்ந்தெடுப்பது என்று நன்கு
மதிப்பீடு செய்து காங்கிரசு முடிவெடுத்திருக்கலாம்.
ஆனால், காங்கிரசுக் கட்சி போட்டியிட்ட 28 தொகுதிகளில் 23 இடங்களில் தவெக நம்மை தோற்கடித்திருக்கிறது. இந்தப் பின்னணியில் அக்கட்சியுடன் காங்கிரசுக்கட்சி கூட்டணி சேருவது,கட்சியை நெறியற்றதாக மட்டுமல்ல, அரசியல் ரீதியிலும் மூர்க்கமானதாகக் காட்டும்.
மேலும்,பின்கதவு வழியே வகுப்புவாத பாஜக நுழைவதை இது எளிதாக்குமானால்,அரசியல் கால்பந்து வரலாற்றில் மிகமோசமான ‘சேம் சைட் கோல்’ அடித்தவர்கள் ஆவோம்.இனி யார் நம்மை நம்புவார்கள்?
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.


