ஸ்டெர்லைட் விரிவாக்கம் கூடாதா? ஆலையே வேண்டாமா? – கமல் குழப்பம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடிக்குச் சென்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

அப்போது அவர் கூறியதாவது…..

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக இருக்கின்றன. இதைத் தவிர வேறு என்ன சொல்வது. இத்தனை வருடம் ஆகி விட்டது. அரசின் அனுமதி இல்லாமல் இவ்வளவு பெரிய தவறு நடந்து இருக்காது. அவர்களுக்கு தெரிந்து தான் நடந்து உள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் தங்கள் வேலையைச் சரிவரச் செய்தார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் நேரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்தால், எந்த மாசும் இருக்காது. இதனை ஆதாரமாக வைத்து, மாசற்ற ஆலை என்று கூறக்கூடாது.

இந்தப் போராட்டத்துக்கு அரசைச் செவிசாய்க்க வைக்க வேண்டியது கடமை. ஆலை விரிவாக்கத்தை அனுமதிக்கக் கூடாது. வேறு ஏதேனும் சட்டச் சிக்கல்கள் இருந்தால் பார்க்க வேண்டும். முடிந்தால் மூடிவிடுவது நல்லது. மக்களின் உயிரை விட தாமிர வியாபாரம் தேவையா? வருகிற 4-ந்தேதி காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் விரிவாகப் பேச உள்ளேன். சட்டரீதியான போராட்டம் குறித்து வக்கீல்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

நான் செய்து கொண்டு இருக்கும் வேலையில், முன்பு இருந்த நிலையும், தற்போது உள்ள நிலையும் வேறு. ஏன் வந்தீர்கள் என்று கேட்காமல், இப்போதாவது வந்தீர்களே என்று சந்தோசப்படுவது நல்லது.

விளம்பரம் என்பது மக்களின் நல் ஆதரவுடன் எனக்கு வாழ்க்கை முழுவதும் கிடைத்து உள்ளது. தேவைக்கு அதிகமாக விளம்பரம் கிடைத்து உள்ளது.சினிமாவில் தான் ஏற்றம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் தற்போது தான் புரிகிறது, மக்களுக்காக உழைப்பதை விட பெரிய ஏற்றம் ஒன்று இருக்க முடியாது. என் வாழ்க்கையில் நான் ஒரு படி அல்ல, பல படிகள் மேலே உயர்ந்து உள்ளேன் என்பதைத்தான் உணருகிறேன்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டக்காரர்களிடம் பேரம் பேசியதாக எனக்குச் செய்தி வந்தது. வதந்தியை அவர்களும் பரப்புகிறார்கள். வதந்திகளைக் கேட்கும் போதே தராசு சரியாக இல்லை. மக்களை தொடர்ந்து சந்திக்க உள்ளேன். இது என் கடமை. பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்துவது, அவர்கள் தங்களை தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான். நாற்காலியை விடாமல் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து உள்ளனர். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

முன்னதாக தூத்துக்குடி செல்லும்போது அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், காவிரி விவகாரத்தில் மாணவர்களுக்கு போராட்ட உணர்வு வந்துவிட்டு என்று சொல்வதைவிட அவர்களுக்குத்தான் முதலில் இந்த மாதிரி உணர்வுகள் வருகிறது. இது ஒரு நல்ல மாற்றம். மாற்றத்தை நோக்கி செல்வது, அரசியலிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது என்றார்.

தூத்துக்குடியில் போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகு நடிகர் கமல்ஹாசன் மீண்டும் விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தார்.

சென்னை திரும்பி வந்த பிறகு விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறும்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கருத்து தெரிவித்த ரஜினிக்கு தொழிற்சாலை நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது. அவர்கள் என்னிடம் சொல்லட்டும் நான் சொல்கிறேன். கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் விளையாடுகிறார்கள். அதேபோல் நான் விளையாடமாட்டேன்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response