திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேற்று குமரி மாவட்டம் சென்றார்.
நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது…
சென்னையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டில் பணிப்பெண் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யத் தீவிரமாகத் தேடி வருகிறது. இதுபோன்று மோசமாக ஒரு இளம் பெண்ணை நடத்திய நபர்கள் யாரையும் விட்டு விட முடியாது. யார் தவறு செய்தாலும் கைது செய்து விடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அதிமுக போராட்டம் அறிவித்துள்ளார்கள். அதற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். கைது செய்த பிறகு நாங்கள் போராட்டம் அறிவித்ததால் கைது நடந்துள்ளது எனக் கூறுவார்கள்.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் யாருக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தைக் கொடுக்க முடியாத நிலையில் ஒன்றிய அரசு உள்ளது. 100 நாள் வேலைத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு ரூ 367 கோடி நிலுவைத் தொகை பாக்கி இருப்பதாகப் பதில் அளித்துள்ளார்கள். இது சம்பந்தமாக அண்ணாமலை பொய் சொல்லலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஒன்றிய அரசு தவறாகச் சொல்லியிருக்கலாம். எதை வேண்டுமானாலும் புனைந்து பேசினால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
தூத்துக்குடியில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.