நிர்பயா குற்றவாளிகளுக்கு மரணதண்டனை – மநு சாஸ்திரப்படி நடந்தது தவறா?

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தனது நண்பருடன் பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மருத்துவ மாணவி ‘நிர்பயா’வை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து கொடூரமாக வீசி எறிந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ராம்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் 2013-ம் ஆண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு குற்றவாளி 18 வயதுக்குக் குறைந்தவர் என்ற அடிப்படையில் சிறார் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய குற்றவாளிகளான அக்ஷய், பவன், வினய் சர்மா, முகேஷ் ஆகிய 4 பேர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை நீதிமன்றம் அவர்களுக்குத் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும் 2014-ம் ஆண்டு உறுதி செய்தது.

இந்நிலையில், 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் தண்டனைக் குறைப்புக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் அடங்கிய அமர்வு குற்றவாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து மே 5 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்புக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம் இன்னொரு கருத்தும் சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. அதில்,

“மணமாகாத அப்பெண் இரவு நேரத்தில் தனியாக ஒரு ஆணுடன் எப்படி நடமாடலாம்? அவளுக்குப் பாடம் புகட்டவே அவளை வன்புணர்வு செய்தோம்“ – நிர்பயா வழக்கு குற்றவாளியின் வாக்குமூலம்.

மநு சாஸ்திரம் அத்தியாயம் 9
14. மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களை புணருகிறார்கள்
15. மாதர்கள் கற்பநிலையின்மையும், நிலையாமனமும், நண்பன்மையும் இயற்கையாகவுடையவர்கள்
16. மாதர்களுக்கு இந்தசுபாவம் பிரமன் சிருட்டித்த போதேயுண்டானதென்று அறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்ய வேண்டியது.

நிர்பயாவை வன்புணர்வு செய்தவர்களுக்கு மரண தண்டனை என்றால், அந்த ஆண்களின் மனதில் பெண் பற்றிய கீழ்த்தரமான கற்பிதத்தை உருவாக்கி, அவர்களின் “ஒழுக்கத்தை” பாதுகாக்கும் ”பொறுப்பை” கொண்டவர்களாக ஆண் மனதில் விதைத்த மநு சாஸ்திரத்தை கொண்டாடுபவர்களுக்கு, அதையே இம்மண்ணின் நீதி என்பவர்களுக்கு என்ன தண்டனை?

இக்கருத்து அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

Leave a Response