
கோவை விமான நிலையத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டியில்…
என்னைப்பொறுத்தவரை எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இன்றுவரை ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.
இப்போது வருகின்ற பிரச்னைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கும்போது, இன்று இவருடைய (எடப்பாடி பழனிசாமி) அரசியலில் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் தலையீடுகள் இருப்பது என்பது நாடறிந்த உண்மை. ஒருவருடைய வாழ்க்கை, அரசியலைப் பொறுத்தவரை பல்வேறு கருத்துகளை பரிமாறினாலும் கூட, இந்த இயக்கத்திற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து இன்று வரையிலும் இயக்கம் வலிமை பெற வேண்டும், இந்த இயக்கம் நாளை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் என் பணிகளை நான் மேற்கொண்டு வருகிறேன். தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது என்பதுதான் தத்துவம். 
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
இதுகுறித்து எடப்பாடி அணியில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது….
எடப்பாடிக்கு அவர் பெற்றெடுத்த பிள்ளை உதவி செய்து வருவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. அவ்வாறு உதவி செய்வது சட்டவிரோதம் கிடையாது. இதனை சிலர் வேறு பார்வையில் பார்த்தால் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது என்று கூறினார்.
இதன்மூலம் எடப்பாடி குறித்து செங்கோட்டையன் கூறிய குற்றச்சாட்டை எடப்பாடி அணியைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமார் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஆர்.பி.உதயகுமாரின் இந்தக் கருத்து எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.


