
அதிமுக உட்கட்சிப் பூசலால் பல பிரிவுகளாகச் சிதறிக் கிடக்கிறது. இந்நிலையில்,கட்சி ஒருங்கிணைந்து வலிமை பெறவேண்டும் என்று சொன்னதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இதை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் என அறிவித்திருக்கிறார் செங்கோட்டையன்.
நீதிமன்றத்தில் அவருக்கான நியாயம் உடனடியாக கிடைக்குமா? என தெரியவில்லை.
அதனால், அரசியல்ரீதியாக அதிரடியாக சில முடிவுகளை அவர் எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதன்படி, ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பேற்று அங்கெல்லாம் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டிருக்கிறாராம் செங்கோட்டையன்.
இதற்கான தொடக்ககட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோரின் செயல்பாடுகள் பிடிக்காமல் அதிருப்தியில் இருக்கும் பலரும் இப்போது செங்கோட்டையன் பின்னால் திரண்டு நிற்பதால் இந்த முயற்சிக்குப் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது என்கிறார்கள்.
ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோரால் தென்மாவட்டங்களில் சுமார் ஐம்பதிலிருந்து அறுபது தொகுதிகள் கைவிட்டுப் போயிருக்கிறது.
இந்நிலையில், எடப்பாடி வலிமையாக இருப்பதாகச் சொல்லப்படும் மேற்கு மாவட்டங்களில் சுமார் நாற்பது தொகுதிகளில் செங்கோட்டையன் வேட்பாளரை நிறுத்தினால் அங்கும் எடப்பாடி அணி நிச்சயம் தோல்வியைத் தழுவும் எனும் நிலை.
இதனால், எடப்பாடிஅணி சார்பாக தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டியவர்கள் கூட தற்போது பின்வாங்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதனால் அந்த அணி கலகலத்துப் போயிருக்கிறது.செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தெம்பாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.


