சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகள் – பின்னணியில் முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக நான்கு பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறது.அதோடு ஜெயலலிதா மறைவுக்குப் பின் எல்லாத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியையே சந்தித்து வருகிறது.

இதனால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினர் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமி தவிர மற்ற அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.எடப்பாடி அணியில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையனும் இதை வலியுறுத்தி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

இந்த ஒருங்கிணைப்பை அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் பாஜகவும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பசும்பொன் முத்துராமங்கத்தேவர் குருபூஜை விழா இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (அக்டோபர் 30) நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள மதுரை செல்லும் சசிகலாவை வரவேற்று மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் அவனியாபுரம் பகுதியில் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதில், 2026 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட, அதிமுகவில் காட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். இந்த ஆட்சி மாற்றத்திற்கு சின்னம்மா (சசிகலா) பிள்ளையார் சுழி போட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மதுரை இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு இந்தச் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் இதன் பின்னணியில் இப்போது எட்ப்பாடி அணியில் இருக்கும் முன்னாள்அமைச்சர்கள் இருக்கலாம் என்கிற ஐயம் அக்கட்சியினர் மத்தியிலேயே இருக்கிறது.

இது எடப்பாடி பழ்னிச்சாமியின் தீவிர ஆதரவு அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response