சசிகலா தலைமையில் அதிமுக – பசும்பொன்னில் நடந்த ஒருங்கிணைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலா மற்றும் டிடிவி.தினகரனுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் 2017 இல் ஜெயலலிதா சமாதி முன்பு தர்மயுத்தம் தொடங்கினார்.

அதன்பிறகு, ஊழல் வழக்கில் சசிகலாவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சசிகலா, டிடிவி.தினகரன் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் தலையிட்டு எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இடையே சமாதானம் செய்து வைத்தார். இதனால் ஓபிஎஸ் துணை முதலமைச்சரானார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தீவிரம் காட்டினார். இதனால், இருவரிடையே பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் பிரிந்தார்.

ஏற்கனவே, டிடிவி.தினகரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அமமுக என்ற தனிக் கட்சியை நடத்தி வரும் நிலையில், எடப்பாடிக்கு எதிராக டிடிவி, ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வந்தனர். ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் அதிமுகவில் உள்ள அணிகள் ஒன்றிணைந்து ஒரே அணியாகச் செயல்பட வேண்டுமென தொடர்ந்து கூறி வருகின்றனர். டிடிவியோ எடப்பாடி இல்லாத அதிமுக என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி, சசிகலா, டிடிவி மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரையும் ஒரே அணியின் கீழ் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தேர்தல் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என பாஜக எண்ணி காய் நகர்த்தியது. ஆனால், மூவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தால் தனது பதவி நிலைக்காது என எண்ணிய எடப்பாடி, இவர்களை சேர்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஓபிஎஸ் மற்றும் டிடிவியை சந்திப்பதைத் தவிர்த்தார். பலமுறை முயற்சித்தும் பலன் கிடைக்காத நிலையில் ஓபிஎஸ் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரைத் தொடர்ந்து, டிடிவியும் தேஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருவரின் அறிவிப்பு எடப்பாடிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திடீரென அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி, எடப்பாடிக்கு கெடு விதித்தார்.

செங்கோட்டையனின் இந்தக் கருத்தை சசிகலா, டிடிவி.தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர். செங்கோட்டையனின் அறிவிப்பு அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்படி அதிரடியாக பறித்தார். மேலும், அவரது ஆதரவாளர்களின் பதவியை பறித்ததோடு கட்சியில் இருந்தும் இடைநீக்கம் செய்தார். 2 பேரை கட்சியை விட்டு நீக்கம் செய்தார்.

அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன் என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக செங்கோட்டையனிடமும் ஓபிஎஸ் தொலைபேசியில் பேசினார். எடப்படிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையனை கோபியில் உள்ள அவரது வீட்டில் தினமும் ஏரளாமான டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆதரவாளர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். டிடிவியும் ஓபிஎஸ், செங்கோட்டையனை தேவைப்பட்டால் சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், இவர்களை ஒருங்கிணைக்க பாஜக டெல்லி மேலிடம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இதற்காக செங்கோட்டையனை டெல்லிக்கு வரவழைத்து, அதிமுக ஒன்றிணைப்பு தொடர்பாக ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் பேசினர். இதைத்தொடர்ந்து, எடப்பாடி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், டிடிவி, ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் எப்போது வேண்டுமானாலும் ஒன்றாக சந்திக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு மதுரை சென்ற ஓபிஎஸ், அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அந்த விடுதிக்கு நேற்று காலை வந்த செங்கோட்டையன், ஓபிஎஸ் அறைக்குச் சென்று அவரைச் சந்தித்தார். அப்போது செங்கோட்டையன் ஓபிஎஸ்சிற்கு சால்வை அணிவித்தார். செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ்சும் அவரது ஆதரவாளர்களும் சால்வை அணிவித்தனர். பசும்பொன் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவே மதுரை சென்றிருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும், கோச்சடை பகுதியில் வழக்கமாக தங்கும் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

ஓபிஎஸ்சை செங்கோட்டையன் பார்த்ததும், அங்கிருந்தபடி தனி அறைக்குச் சென்ற இருவரும் டிடிவி.தினகரனை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது பசும்பொன் செல்லும் வழியில் இடையில் மூவரும் ஒன்றாகச் சந்திக்கலாம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒரே மகிழுந்தில் பசும்பொன் கிளம்பினர். மகிழுந்தின் முன் இருக்கையில் ஓபிஎஸ் உட்கார்ந்திருக்க, பின் இருக்கையில் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் பாமஉ சையதுகான் ஆகியோர் பசும்பொன் கிளம்பிச் சென்றனர்.

இவர்களது கார் சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம் பகுதிக்குச் சென்றதும், இவர்களது ஆதரவாளர்கள் தரப்பில் அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, திறந்த மூடுந்தில் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் நின்றவாறு ஆதரவாளர்களிடம் கையசைத்தவாறு சென்றனர். இருவரும் பசும்பொன் செல்லும் வழியில் அபிராமம் நெடுங்குளம் பகுதிக்குச் சென்றதும் மூடுந்தில் இருந்து இறங்கி மகிழுந்துக்குள் சென்று டிடிவி.தினகரன் வருகைக்காகக் காத்திருந்தனர். அரைமணி நேரத்திற்கும் மேல் காத்திருந்த நிலையில், டிடிவி.தினகரன் தனது அந்த இடத்திற்கு சென்று சேர்ந்தார்.

அங்கு மூவரும் சந்தித்து கொண்டனர். சிறிது நேரம் பேசிவிட்டு பசும்பொன்னுக்குக் கிளம்பினர். அப்போது அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து பசும்பொன் சென்றதும் மூன்று பேரும் ஒன்றாகச் சேர்ந்து பசும்பொன் நினைவாலயத்திற்கு சென்று தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவு இல்லத்தில் காத்திருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கு சசிகலா வந்தார். நினைவிடத்தில் இருந்து வௌியே வந்த சசிகலாவை வரவேற்ற ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினர். சுமார் அரைமணி நேரம் மூவரும் தனியாகப் பேசிக்கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து சசிகலா கிளம்பிச் சென்றார்.

அதன்பின் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையனும் கிளம்பிச் சென்றனர். கட்சியில் அனைவரும் ஒருங்கிணைய வேண்டுமென செங்கோட்டையனும், ஏற்கனவே பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறிவரும் நிலையில் பசும்பொன்னில் சசிகலா, டிடிவியுடன் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியது அதிமுகவில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், எடப்பாடி இதற்கு எதிரான நிலையில் உள்ளார். இதனால், இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தங்களுக்கு ஆதரவாகத் திரட்டுவது என ஏற்கனவே முடிவு செய்துள்ளனர்.

இதற்கேற்ப சரியான நாளாக தேவர் ஜெயந்தியை தேர்வு செய்தனர். அன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் பசும்பொன்னைச் சுற்றியே இருப்பார்கள் என்பதால், இவர்கள் 4 பேரும் மதுரையை மையமான இடமாகத் தேர்வு செய்துள்ளனர்.

அதிமுக எடப்பாடி கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும், கட்சி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு எதிராகவும் இருப்பதாக அதிமுகவில் பேச்சு எழுந்துள்ளது. இதனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதரவு இல்லாததால் இந்தப் பகுதியில் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதே நேரம் தென்மாவட்டங்களில் போட்டியிட்ட ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெற்றனர்.

இதன்மூலம் தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகியோர் கூறி வந்தனர். இதைப் பொதுவெளியில் காட்டும் வகையிலும், குறிப்பிட்ட சமுதாயம் எடப்பாடி தலைமைக்கு எதிராக இருப்பதை காட்டும் நோக்கிலும் எடப்பாடிக்கு எதிரான 4 பேரும் பசும்பொன்னில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்திற்கு வந்த சசிகலா, முத்தராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சிறிது நேரம் தரையில் அமர்ந்து தியானம் செய்தார். தொடர்ந்து அறங்காவலர் காந்தி மீனாளை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது நினைவு இல்லத்தில் இருந்து வெளியே வந்த சசிகலாவை, வெளியே சென்ற ஓபிஎஸ், செங்கோட்டையன் மீண்டும் வந்து வணக்கம் செலுத்தி சந்தித்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலாவை, செங்கோட்டையன், ஓபிஎஸ் ஆகியோர் வெளிப்படையாக நேருக்கு நேர் சந்தித்ததால் அங்கிருந்த ஆதரவாளர்கள், தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

அதன்பின்,பசும்பொன்னில் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் கூட்டாகப் பேட்டியளித்தனர்.

அப்போது ஓபிஎஸ் கூறுகையில்….

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சன்னதியில் ஜெயலலிதாவின் ஆட்சி, எம்ஜிஆரின் ஆட்சி மீண்டும் உருவாக நாங்கள் சபதம் மேற்கொண்டுள்ளோம். எங்களோடு டிடிவி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோரும் வந்துள்ளனர். நாங்கள் இணைந்து செயல்படுவோம். பசும்பொன்னில் உருவான இந்தக் கூட்டணி தொடரும் என்றார். இதைத்தொடர்ந்து, மதுரை அருகே கப்பலூர் தனியார் உணவு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ்சிடம் 2021 இல் துரோகிகளால் தான் அதிமுக தோல்வியடைந்ததாக இபிஎஸ் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு ஓபிஎஸ், ‘‘யாரால் தோல்வியடைந்தோம் என்பது மக்களுக்குத் தெரியும்’’ என பதில் அளித்தார்.

டிடிவி.தினகரன் கூறுகையில், ‘‘எம்ஜிஆர் கால மூத்த நிர்வாகியான செங்கோட்டையனும் இப்போது எங்களுடன் வந்திருக்கிறார். ஜெயலலிதா, பசும்பொன்னுக்கு வருவதற்கு முன்பு ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்கள் முன்னதாக வந்திருந்து அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். தற்போது ஜெயலலிதாவின் தொண்டர்களை காப்பதற்காக எங்களோடு அவரும் வந்திருக்கிறார். மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைவதற்கு செங்கோட்டையன், ஓபிஎஸ் ஆகியோருடன் சேர்ந்து பணியாற்ற இருக்கிறோம்’’ என்றார்.
‘‘எடப்பாடிக்கு எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா’’ என கேட்டதற்கு, ‘‘துரோகத்தை வீழ்த்தும் வரை நாங்கள் தொடர்வோம்’’ என்றார். ‘‘செங்கோட்டையன் இன்னும் அதிமுகவில் தானே இருக்கிறார்’’ என்ற கேள்விக்கு,‘‘செங்கோட்டையன் ஏற்கனவே இங்கு வருவதாக கூறினார். தற்போது வந்துவிட்டார். அதிமுக எங்களுக்கு எதிரி கிடையாது. எடப்பாடி மட்டும் தான் எங்களுக்கு எதிரானவர். ஜெயலலிதாவின் தொண்டர்களாக நாங்கள் ஒன்றிணைந்து இருக்கிறோம்’’ என்றார்.

மதுரையில் சசிகலா நேற்று மாலை அளித்த பேட்டியில்…

அதிமுகவை ஒருங்கிணைப்பதை நான் நிச்சயமாகச் செய்வேன். சர்ப்ரைசாக எல்லாமே நடக்கும். வெயிட் அன்ட் சீ. பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன். செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன். பார்ப்போம் எத்தனை பேரைத்தான் கட்சியில் இருந்து அவர் நீக்க முடியுமென்று. எம்ஜிஆரின் மறைவில் இருந்து கட்சியைப் பார்த்து கொண்டுள்ளேன்.
பழைய நிலை அதிமுகவில் திரும்பும். இரண்டாவது முறையாக கட்சியில் ஏற்பட்டுள்ள இப்பிரச்னையை நிச்சயம் சரி செய்வேன். 2021 இல் துரோகிகளால் தோற்றோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். யார் துரோகி என அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களிடம் போய்க் கேட்டால் தெரியும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் பணியை ஆரம்பத்திலேயே தொடங்கி விட்டேன். அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை.
என்னைப் பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும். எப்படி டீல் செய்வேன் எனத் தெரியும். இப்போது இருப்பவர்கள் போல நானும், ஜெயலலிதாவும் ஸ்பூன் பீடிங்கில் வந்தவர்கள் இல்லை. தலைவர் மறைவு, அதன் பின்பு அதிமுக இக்கட்டான காலகட்டத்தில் இருந்த போது ஜெயலலிதாவை திட்டியவர்கள், எதிர்த்தவர்களை கூட நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகர்களாகவும் ஆக்கி உள்ளோம். என்னுடைய மூவ் தனியாக தான் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனால், இனிமேல் ஓபிஎஸ் செங்கோட்டையன் டிடிவி.தினகரன் ஆகியோர் சசிகலா தலைமையில் செயல்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response