
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக தில்லியில் அக்டோபர் 27 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், குஜராத், இராஜஸ்தான் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும். பீகாரில் ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இந்த மாநிலங்களில் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்தார்.
இதற்கு தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக் கட்சிகள் இதை எதிர்த்துள்ளன.
எடப்பாடி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்,இதை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்,
2026 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. முறையான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு ஏதுவாக, கட்சியின் சார்பில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அதிமுக சார்பில் பூத் (பாகம்) அமைப்பதற்காக, மாவட்டம் வாரியாக ஏற்கெனவே நியமிக்கப்பட்டு, அப்பணி நிறைவடைந்த காரணத்தால், கடந்த 11 ஆம் தேதி விடுவிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள், மீண்டும் வரும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியினைக் கண்காணித்து, மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து முழுமையாக செய்து முடித்து, அதன் விவரங்களை கட்சித் தலைமைக்குத் தெரிவிகக் வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கைக்கு மாறாக உள்ளது.அவர் அதிமுக சார்பில் இதை முழுமனதுடன் வரவேற்கிறோம் என்று சொல்லியிருந்தார்.எடப்பாடி அறிக்கையில் வரவேற்கிறோம் என்று இல்லை அதோடு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை உடனிருந்து கண்காணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
இவர் இப்படி ஓர் அறிக்கை வெளியிடும் முன்பு அதை வரவேற்று ஜெயகுமார் அறிக்கை வெளியிட்டிருப்பது அவருடைய சொந்த முடிவு என்று சொல்லப்படுகிறது.
இதன்மூலம், இதுவரை மறைமுகமாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வெளிப்படையாக வெளிப்பட்டிருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே செங்கோட்டையன் எதிர்ப்புக் குரல் கொடுத்துவருகிறார். இப்போது ஜெயகுமாரரும் வெளிப்படையாக எதிர்ப்பைத் தொடங்கிவிட்டார் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.


