இரண்டு தொகுதிகளில் 120 கோடி செலவு செய்த விஜய்கட்சி – புதியதகவல்

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளரும், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவருமான அன்பழகன் நேற்று செய்தியாள்ர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….

புதுச்சேரியில் விஜய்க்கு செல்வாக்கு இல்லை என்பது தட்டாஞ்சாவடி தேர்தல் முடிவிலிருந்தே தெரியும். சினிமா மோகம், ரீல்ஸ் வெளிப்பாடு தமிழக மக்களிடம் எடுபடும்,புதுச்சேரி மக்களிடம் எடுபடாது என்பது இந்தத் தேர்தல் முடிவு காட்டியுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டின் வாசலில் தான் இருந்தார். அவரை நாங்கள் சேர்க்கவில்லை. அதனால் அவர் சென்றுவிட்டார். அதிமுக, தவெக ஒன்றுதான் என்று அவர் கூறினால், தவெக கட்சியைக் கலைத்துவிட்டு எங்கள் கட்சிக்கு வரச்சொல்லுங்கள். இனி அவர்கள் விசில் சின்னத்தில் நிற்க வேண்டாம்.இரட்டை இலை சின்னத்தில் நிற்கட்டும்.

தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முழுமையாக செல்வாக்கை இழக்கவில்லை. தமிழக இடைத்தேர்தலைப் பொறுத்தவரை பணபலம், ஆட்சி அதிகாரம், அடக்குமுறை இவை அனைத்தும் சேர்ந்து, மக்கள் ஏமாற்றப்பட்டு வாக்குகளைப் பெற்றுள்ளனர். தாராபுரம் தவெக வேட்பாளரின் ஒப்புதல் வாக்குமூலம் அனைவருக்கும் தெரியும். ரூ.15 இலட்சம் ஒரு நாளிலேயே செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக ரூ.120 கோடி வரை செலவிட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் முன்வந்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி செல்லாது என்று அறிவிக்கவேண்டும்.தவெக கட்சி அல்ல அது ஒரு கம்பெனி.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response