
தாராபுரம்,மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது,எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்கிற நிலையை பாமக எடுத்தது.அது ஆளும்கட்சிக்கு சாதகமான முடிவு என்றும் தேர்தல் முடிந்ததும் தமிழக அமைச்சரவையில் பாமக சேரும் என்றும் சொல்லப்பட்டது.தேர்தல் முடிவும் அதை மெய்ப்பிப்பது போலவே அமைந்திருந்தது.
இந்நிலையில்,அமைச்சரவையில் பாமகவைச் சேர்க்க விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உலவின.
அதேசமயம்,நேற்று முன்தினம் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட காணொலியில்….
இரண்டு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கும் விசிகவின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மனசாட்சியுள்ள அனைவரும் அறிவர். ஆனால் இதுகுறித்து விவாதிப்பவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விசிகவின் முக்கியத்துவத்தை மறைக்க முயற்சிக்கின்றனர்.முதலிடத்தில் இருந்த அதிமுக 3-வது இடத்துக்கு சென்றுள்ளது. அதைக் குறித்துகூட பேசாதவர்கள், தவெக வெற்றிக்கு விசிக காரணம் இல்லை; பாமக தான் காரணம் என்ற கதையை கட்டமைக்கின்றனர். அவர்களின் நோக்கம் எப்படியாவது விசிகவை தவெக கூட்டணியில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என்பது தான். திமுக கூட்டணியில் இருந்த போதும் இதே முயற்சிகளை செய்தனர். அதையே தற்போதும் கையாளுகின்றனர். அதிமுகவின் வாக்குகள் எப்படி திமுகவுக்கு வராதோ அதேபோல விசிக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு பாமகவின் வாக்குகள் கிடைக்காது.
தவெகவுக்கு பாமக ஆதரவு அளிக்க போகிறது; தவெக கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம்பெற போகிறது என பரப்பினர். இப்படி ஒரு ஆசையை தூண்டுவதன் மூலம் பாமகவின் வாக்குகள் திமுகவுக்குச் செல்லாமல் கணிசமான வாக்குகள் தவெகவுக்கு செல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், விசிகவினரை சோர்வடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் பரப்பியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
நேற்று,தவெக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக வெளியேறும். பதவி இன்று வரும்; நாளை போகும்; ஆனால் கட்சிதான் முக்கியம். அமைச்சர் பதவியை விட திருமாவளவன், விசிகதான் முக்கியம்.சாதியவாத பாமக, மதவாத பாஜகவுடன் விசிக என்றும் கூட்டணி வைக்காது என அமைச்சர் வன்னிஅரசு கூறியுள்ளார்.
இவ்விரு நிகழ்வுகளும் அமைச்சரவையில் பாமக சேருவதை விசிக எதிர்க்கிறது எனும் கருத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
இதனால்,அமைச்சரவையில் பாமகவை சேர்க்கும் அறிவிப்பு தாமதமாகிறது என்கிறார்கள்.


