
தமிழகத்தில் தவெக தலைமையில் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் காங்கிரசு, விசிக, ஐயுஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்தன.
பொதுவுடைமைக் கட்சிகள் கூட்டணியில் இணையாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக
அறிவித்தன.ஆட்சிக்கு ஆதரவு கொடுத்திருந்தாலும்,அரசின் செயல்பாடுகளையொட்டி தவெக அரசை விமர்சனம் செய்து வரும் பொதுவுடைமைக் கட்சிகள், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது, தவெக மீது கடும் விமர்சனங்களை வைத்தன.இதனால்,பொதுவுடைமைக் கட்சிகள் ஆதரவை திரும்பப் பெற்றுவிடும் என்கிற அச்சத்தில் விஜய் அரசு இருக்கிறதென்கிறார்கள்.
இதற்கிடையே,பொதுவுடைமைக் கட்சிகளின் 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக, 4 சமஉக்கள் வைத்துள்ள பாமகவை, தவெக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முதல்வர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான நகர்வுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதேநேரம், தவெக அமைச்சர்களில் சிலரது செயல்பாடுகள் திருப்தியாக இல்லாததால், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் முதல்வர் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
கூட்டணியில் பாமக இணையும்போது, அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணியை அமைச்சரவையில் சேர்க்கிறோம் என்று விஜய் தரப்பில் உறுதிமொழி கொடுக்கப்பட்டிருப்பதாகவும்,விரைவில் அது நடக்கும் என்றும் சொல்கின்றனர்.


