நள்ளிரவில் பெண் காவல்ஆய்வாளரை அழைத்த அமைச்சர் – எடப்பாடி கண்டனம்

கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ்,சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திற்குச் சென்றார்.வழியிலுள்ள தக்கோலம் காவல்நிலையத்திற்கு நள்ளிரவில் சென்றார். அங்கு பணியில் இருந்த காவலர்களிடம்,சோதனைச்சாவடியில் காவலர்கள் ஏன் பணியில் ஈடுபடவில்லை எனவும், காவல்நிலையத்தில் ஆய்வாளர்,துணை ஆய்வாளர் எல்லாம் எங்கே எனவும் கேட்டுள்ளார்.

பணியில் இருந்த காவலர்,ரோந்து உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகக் காவலர்கள் சென்றுள்ளனர் எனவும் ஆய்வாளருக்கு ஓய்வு என்பதால் அவர் குடியிருப்புக்குச் சென்றுள்ளார் என்றும் கூறினராம்.உடனே ஆய்வாளரை காவல்நிலையம் வரச்சொல்லுங்கள் என அமைச்சர் கூறியுள்ளார்.இதையடுத்து,உடனடியாக குடியிருப்புக்குச் சென்று ஆய்வாளரிடம்,அமைச்சர் காவல் நிலையம் வந்திருப்பது குறித்து தகவலை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அவசர அவசரமாக ஆய்வாளர் ஷாலினி காவல்நிலையம் சென்றுள்ளார். அப்போது அவரிடம்,சோதனைச்சாவடியில் ஏன் பணியில் யாரும் இல்லை என அமைச்சர் கேட்டுள்ளார். அதற்கு அவர், காவலர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இருக்கும் காவலர்கள் இரவு ரோந்து உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குச் சென்றுள்ளனர் என்றாராம்.மேலும் வழக்கு விவரங்கள் குறித்தும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் கேட்டறிந்து கோப்புகளைப் பார்வையிட்டார்.

மேலும் வழக்கு தொடர்பான சில விவர பதிவுகள் கைபேசியில் இருந்ததை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அதைத்தொடர்ந்து அவர், அரக்கோணம் நகர காவல்நிலையம் மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும் அதிரடியாக நள்ளிரவில் ஆய்வு செய்துள்ளார்.

அமைச்சரின்,இந்த நள்ளிரவு ஆய்வு தொடர்பாக காட்சிப்பதிவுகள் வெளியிடப்பட்டு வேகமாகப் பரவிவருகிறது. வருகிறது.

இதனால்,நள்ளிரவில் காவல்நிலையத்தில் அமைச்சர் ஆய்வு செய்யவேண்டிய அவசியம் என்ன? அதுவும், முதல்வர் பொறுப்பு வகிக்கும் காவல்துறையை வேறு துறையைச் சார்ந்த அமைச்சர் ஆய்வு செய்திருப்பது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது….

தவெக தலைவர் விஜய் வழியில் தொண்டர்கள்,நிர்வாகிகள்,எம்எல்ஏக்கள்,அமைச்சர்கள் என்று அனைவருமே ‘ரீல்ஸ்’ மோகத்தில் ஆழ்ந்து,மக்களின் அடிப்படை பிரச்சினைகளை திசைதிருப்பும் ஒரு மோசமான ஆட்சியை தவெக அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது.
பொதுவாக காவல்நிலையம் என்பது சட்டத்தை பாதுகாக்குமிடம்.அமைச்சர்கள் யாரும் காவல்நிலையங்களுக்கு நேரில் செய்து ஆய்வு செய்வதில்லை.ஆனால் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ்,தக்கோலம்,அரக்கோணம் காவல்நிலையங்களை நள்ளிரவில் ஆய்வு செய்ததுடன்,பணியில் இருந்த பெண் காவலர்களது செல்போனையும் ஆய்வு செய்ததாக ரீல்ஸ் எடுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
தவெக அமைச்சர் நள்ளிரவில் காவல்நிலையத்திற்கு ஆய்வுக்குச் சென்றாரா? அல்லது,யாரேனும் விசாரணைக் கைதியைச் சந்திக்கச் சென்றாரா? என்றும்,காவல்நிலையத்திலுள்ள பெண் காவலர்களின் கைப்பேசியை எந்த நோக்கத்தில் ஆய்வு செய்தார்? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.’ரீல்ஸ் மோகத்தில்’ அமைச்சர்கள் காவல்நிலையங்களில் ஆய்வு செய்வது தவறான முன்னுதாரத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response