
விஜய் கட்சியின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியர் இல்லத்திற்குச் சென்றதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.இதைத்தொடர்ந்து,அவர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவரின் பதவியைப் பறிக்கவேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்தும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்லாமல் தமிழக அரசின் சார்பில் இந்தச்சிக்கல் தொடர்பாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதில்களைச் சொல்லி வருகின்றனர் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்தச்சிக்கல் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.இதுதொடர்பாக,தேசிய மகளிர் ஆணையம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது….
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசமான வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக ஊடகத்தில் வந்த செய்தியை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.அந்த செய்தியில்,அவர் முன்னரும் தவறான நடத்தையில் ஈடுபட்டதாகவும்,மதுபோதையில் மாவட்ட ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக,தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி விஜயா ரஹாத்கர்,தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.அதில்,மாவட்ட ஆட்சியர் உயரதிகாரிகளிடம் அளித்த புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்பட இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்யுமாறும்,சம்பந்தப்பட்ட நபர் வகிக்கும் பதவியைப் பொருட்படுத்தாமல்,எந்தவிதமான அரசியல் அல்லது வெளிப்புறத் தலையீடும் இன்றி இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக,எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.பொதுப்பணியில் உள்ள பெண்களின் கண்ணியம்,பாதுகாப்பு மற்றும் நலன் எவ்வித விதிவிலக்கும் இன்றி உறுதி செய்யப்பட வேண்டும்.எத்தகைய பதவியோ அல்லது செல்வாக்கோ,துன்புறுத்தல் அல்லது தவறான நடத்தையில் ஈடுபடும் ஒருவரைப் பொறுப்புக்கூறலிலிருந்து காப்பாற்ற முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையத்தின் இந்த நடவடிக்கை முதல்வர் விஜய்க்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளதென அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


