கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளில் அரசியல் – கி.வீரமணி அறிக்கை

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் மரணமடைந்தனர்.ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்….

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களிலும் மற்றும் சில ஊர்களிலும் காய்ச்சப்பட்ட கள்ளச் சாராயத்தைக் குடித்த பலரும் உடல் பாதிப்புக்கு ஆளாகி, இதுவரை 39 பேர் மரணம் மற்றும் பலர் பல மருத்துவமனைகளில் உடனடியாகச் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைகளைப் பெற்றும் வருகின்றனர். அவர்களில் சிலர் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் துன்பமான செய்திகளும் வருகின்றன. இந்தச் செய்தி நேற்று (ஜூன் 19) தெரிந்தவுடனேயே, தமிழக அரசு குறிப்பாக முதல்வர் மின்னல் வேகத்தில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை நொடியும் தாமதிக்காமல் முனைப்புடன் செய்துள்ளது, அதிர்ச்சியிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, மனிதநேயர்கள் அனைவருக்குமே ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

இதில் ஆளுமையில் அலட்சியம் காட்டியதாகக் கருதப்படும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), மாவட்ட காவல்துறை அதிகாரி (எஸ்.பி.) மற்றும் பல பொறுப்பாளர்களை மாற்றி, புதியவர்களை உடனடியாகப் பொறுப்பேற்கச் செய்துள்ளார் முதல்வர்.மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், பொதுப் பணித்துறை அமைச்சருமான ஏ.வ.வேலுவையும், மதுவிலக்கு ஆயத்தீர்வு அமைச்சர் ஈரோடு முத்துசாமியையும் உடனடியாக அங்கே சென்று உரிய உதவிகள் மற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஆணையிட்டுள்ளார். இன்று (ஜூன் 20) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கள்ளக்குறிச்சிக்குச் செல்கிறார்.

இப்படி கள்ளச் சாராயம் கல்வராயன் மலைப்பகுதியில் காய்ச்சுவது பல காலமாகவே சில சமூக விரோத சுயநல பேர்வழிகளால் நடைபெறுகிறது என்று பல பொதுநல அமைப்புகள் காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றும், அதனைத் தடுத்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், வாங்கி விற்பனை செய்யும் கசடர்களையும் கைது செய்து, அறவே அதனைத் தடுத்திட குறிப்பிட்ட அதிகாரிகள் தவறிவிட்டனர் என்ற பேச்சு, அப்பகுதி மக்களிடையே பரவலாக உள்ளது.

காவல்துறையில் கடமையாற்றும் பணியாளர்கள் பலர் இருந்தாலும்கூட, இப்படிப்பட்ட கறுப்பு ஆடுகளும், கையூட்டின் மயக்கத்தில் கவலையற்று வாழும் சிலரால் அத்துறைக்கும், ஏன் தமிழக அரசுக்குமே அவப்பெயர் ஏற்படும் அவலம் உள்ளது.‘மெத்தனால்’ வாங்கி, கள்ளச்சாராயத்தில் அதனைக் கலந்துதான் விற்பனை செய்துள்ளனர். உடனடியாக அதனை எங்கெங்கே, யார் யார் எவ்வளவு வாங்கி, எதற்குப் பயன்படுத்தியுள்ளனர் என்பது போன்ற பல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழம அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

தொலைக்காட்சிகளில் அந்தக் குடும்பத்துத் தாய்மார்களும், பெண்களும், குடும்பத்தவர்களும் கதறிக் கதறி அழுது புரளும் காட்சி, நம் அனைவரின் நெஞ்சையும் உருக்கவே செய்கிறது. அதற்கு மேலும் நிரந்தரமாகவே எங்கெங்கு இப்படி இரகசியமாக இந்தக் கள்ளச் சாராய உற்பத்தித் தொழிற்சாலைகளும், விற்பனைகளும் நடைபெறுவதை சல்லடை போட்டு சலிப்பதுபோன்ற ஆய்வுகளைச் செய்ய உடனடியாக திறமையும், நேர்மையும் வாய்ந்த சில காவல்துறை அதிகாரிகளை நமது முதல்வர் நியமித்து, ஆய்வு செய்ய வைப்பதும் அவசரம், அவசியம்.

மனிதாபிமான பிரச்சினையான இதில் அரசியல் தூண்டில் தேவையில்லை. வழக்கம்போல், உடனடியாக அன்றாட அவசரப் பேட்டி அரைவேக்காட்டாளர்கள் சிலர், திமுக ஆட்சிமீது இதுவரை வெறும் வாயைத்தான் மென்றோம்; இந்த அவல் கிடைத்தது என்று நினைத்தால், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத் முதலிய ‘டபுள் இன்ஜின்’ ஆட்சிகளில் எங்கெங்கே இதைவிட அதிகமான எண்ணிக்கையில் கள்ளச் சாராய சாவுகள் நடைபெற்றன என்று சுட்டிக்காட்டிப் பதிலடி தரவேண்டியிருக்கும்.

அது இப்போது முக்கிய தேவையல்ல.மாறாக, பாதிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய குடும்பங்களுக்கு ஆறுதலும், இனிமேல் எங்கும் இதுபோன்ற கொடுமைகள் நிகழாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள், வருமுன்னர் காப்பு நடவடிக்கைகள், காவல்துறை களையெடுப்புகள் முதலியவற்றுக்கு முன்னுரிமை தரவேண்டும். இவற்றையும் கடந்து தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நேர்மையாளர் கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாணையம், மூன்று மாதங்களுக்குள் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது, இவ்வரசின் துரித முடிவுக்கும், செயல்பாட்டுக்கும், மக்கள் நலனுக்குமான அக்கறைக்கும் சீரிய எடுத்துக்காட்டாகும். பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நமது ஆறுதலும், இரங்கலும் உரித்தாக்குகிறோம்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response