
தமிழீழப்பகுதிகளில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளை சிங்கள அரசின் நேரடி நிர்வாகத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.இது அனுர அரசின் கோரமுகத்தின் வெளிப்பாடு என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு – செலவுத் திட்ட உரையில் வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின்கீழ் இயங்கிவரும் கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா மற்றும் மன்னார் ஆகிய நான்கு மாவட்டப் பொது வைத்தியசாலைகளையும்,மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் அவிசாவளை மாவட்டப் பொது மருத்துவமனைகளையும் மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்வாங்குவதாக அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறையை நிர்வாக ரீதியாக நிர்க்கதியாக்கும் அரசாங்கத்தின் இந்த எதேச்சாதிகாரம் இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கோர முகத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஏற்கனவே மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்ற நிலையில், வடக்கின் எஞ்சிய நான்கு மாவட்டங்களின் பிரதான வைத்தியசாலைகளையும் ஒரேடியாகக் கொழும்பு கபளீகரம் செய்கின்றது. இதன் மூலம்,வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் ஒரு மாவட்ட வைத்தியசாலைகூட இல்லாத அவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சியின் கீழ் அமைச்சரவைத் தீர்மானமொன்றின் மூலம் கொண்டுவரப்பட்ட அதே அதிகார அபகரிப்புத் திட்டத்தை தற்போதைய அரசாங்கமும் கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது.
மாற்றம் குறித்தும், அதிகாரப் பரவலாக்கம் குறித்தும் பேசி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், முன்னைய அரசுகளைவிடவும் வேகமாகக் கொழும்பில் அதிகாரங்களைக் குவிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.
வைத்தியசாலைகளின் தரத்தை உயர்த்துவதாகவும், சேவைகளை மேம்படுத்துவதாகவும் கூறிக்கொண்டு, மாகாணசபைகள் மக்கள் பிரதிநிதிகளுடன் இயங்காத சூழ்நிலையில் நிறுவனங்களைப் பறித்தெடுப்பது ஜனநாயக விரோதமாகும்.
வடக்கின் வைத்தியசாலைகள் தரம் தாழ்ந்து காணப்படுவதற்கு, மத்திய அரசு மாகாண சபைக்குரிய நிதி ஒதுக்கீடுகளையும், ஆளணி மற்றும் வளங்களையும் திட்டமிட்டு மறுத்தமையே காரணமாகும்.
இலங்கை அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையின் பிரகாரம் மாவட்டப் பொது வைத்தியசாலைகள் மாகாண சபைகளின் அதிகார எல்லைக்கு உட்பட்டவை.இருந்தும்,அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முடியாத இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையும்,கொழும்பில் அதிகாரங்களைக் குவிக்கும் பேரினவாத ஏகாதிபத்தியப் போக்குமே அடிப்படைக் காரணங்கள் ஆகும்.
ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் வழங்கப்படும் எந்தவொரு அதிகாரமும் மத்திய அரசாங்கத்தின் விருப்புக்கு ஏற்ப எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என்பதை இந்த அபகரிப்பு மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


