எஸ்.பி.வேலுமணியைக் கைவிட்டது பாஜக?

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கப்பட்டதில் ரூ.98.25 கோடி முறைகேடுகள் நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பி்ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதனால்,இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்,முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஆணையர்களாகப் பதவி வகித்த இஆப அதிகாரிகளான கந்தசாமி,விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இலஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்,சம்பந்தப்பட்ட 2 இஆப அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் குற்றவிசாரணை மேற்கொள்ள ஒன்றிய அரசிடம் அனுமதி பெற தொடர்ந்து மாதக்கணக்கில் தாமதம் செய்வது ஏன் என்பது குறித்தும், தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்கவும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.இந்த நடைமுறைகளை முடிக்க 2 மாதம் காலக்கெடு விதித்தும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்,ஒன்றிய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை இணைச்செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில்,மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயனுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றவியல்ரீதியாக வழக்கு விசாரணையைத் தொடர பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது,அந்த உத்தரவு தமிழக அரசுக்கு ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும் என்றார்.

அதையடுத்து நீதிபதி,ஒன்றிய அரசின் அனுமதிக்கான உத்தரவைப் பெற்றதும் இலஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அந்த 2 இஆப அதிகாரிகளுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் எனவும்,இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்ட ஒன்றிய அரசை வழக்கில் இருந்து நீக்க உத்தரவிட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்,குற்றவியல் வழக்குகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான குற்ற வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் தொடர மத்திய அரசின் அனுமதியைப் பெறுவதற்கு எவ்வளவு கடினமான முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம் எனக் குறிப்பிட்டார்.

மேலும்,ஏழை, எளியோருக்கு எதிராக மட்டும் வேகமாக சுழலும் சட்ட நடவடிக்கைகள் என்ற சக்கரம்,செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிராக சக்கரம் சுழல மறுக்கிறது.இந்தநிலையை எட்டுவதற்கு நீதிமன்றம் மிகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் இஆப அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடர பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்காமல் இருந்ததற்குக் காரணம்,எஸ்.பி.வேலுமணியைக் கைக்குள் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலில் பல குழப்பங்களைச் செய்ய எண்ணியதுதான் காரணம் என்று சொல்லப்பட்டது.

இவ்வளவு காலம் அனுமதி வழங்காமல் இருந்த பிரதமர் அலுவலகம் இப்போது,அனுமதி வழங்கியிருக்கிறது என்றால்,எஸ்.பி.வேலுமணியை பாஜக கைவிட்டுவிட்டது என்றே அர்த்தம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response