
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது.இந்தச் சிறையில் ஒரே அறையில் 17 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் நேற்று (அக்டோபர் 26) இரவு,அந்த அறையில் இருந்த கைதி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகச் சிறைக் காவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கைதிகள், காவலர்களைத் திடீரெனத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம்,தேக்கம்பட்டி சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.சிறை வளாகத்தைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட காவல்துறையினருடன் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினரும் இணைந்து தப்பியோடிய 17 கைதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது….
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்,அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க,மின்வெட்டு,மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை பியூஸ் பிடுங்கிய நிலையில் இருக்க,தற்போது சிறைத்துறையும் அந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டது.
மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர்தான் என்பதுதான் இதில் ஹைலைட்.
எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து,தூக்கத்தில் கூட “அண்ணாதிமுக புராணம்” பாடிக் கொண்டிருக்கும் அமைச்சர் நிர்மல்குமாரின் நிர்வாக இலட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு!
ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும்.அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ,அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும்!
அது சரி,புழல் ஜெயிலுக்கு ஆய்வுக்கெல்லாம் போனீர்களே முதல்வரே.நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வுதானா? அல்லது,சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா?
கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில்தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?
அதிகரிக்கும் கொலைகள்,
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,
ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம்,
தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள்,
சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்,
இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் “150 நாள் வெற்றி மலர்” வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
தப்பியோடிய கைதிகளைப் பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன்,தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்தவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


