
நடிகர் விஜய் முதலமைச்சரானதும்,அவருடைய நெருங்கிய தோழியான நடிகை த்ரிஷாவும் அரசியலுக்கு வருகிறார்.அவர் விஜய் பதவி விலகிய திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராவார் என்கிற செய்திகள் பரவின.
அதன்பின்,அந்தத் தொகுதியில் நடிகர் இராகவாலாரன்சை போட்டியிட வைக்க விஜய் முடிவு செய்துவிட்டார் அதனால் த்ரிஷாவுக்கு இப்போது வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது.
நீதிமன்றத்தின் தடையால் திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தடைபட்டதால் அந்தப் பேச்சுகள் எல்லாம் அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டன.
இப்போது மீண்டும் நடிகை த்ரிஷா,திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் கட்சி வேட்பாளராகக் களமிறங்கவிருக்கிறார் என்கிற தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.
அதற்குக் காரணம்,இரண்டு நாட்களுக்கு முன்பு,கோவை காந்திபுரம் நூறடி சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியார் கைபேசிக்கடை திறப்பு விழாவில் த்ரிஷா கலந்து கொண்டு அந்தக் கடையைத் திறந்து வைத்தார்.
அப்போது,திரைப்பட இரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அவரைப் பார்ப்பதற்காக கடை முன்பு திரண்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கூட்டம் காரணமாக ஏதும் அசம்பாவிதம் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, காவல்துறையினர் மற்றும் தனிப்பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
கடை திறப்பு விழாவை முடித்துக் கொண்டு புறப்படும் பொழுது நடிகை த்ரிஷா இரசிகர்களையும் பொதுமக்களையும் பார்த்துக் கையசைத்து, இதய வடிவ (Heart In) குறியீடு காண்பித்து, சிலருக்கு கை கொடுத்து சுமார் 100 மீட்டர் தூரம் சாலைவலம் சென்றார்.
அப்போது கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசமுற்பட்டார் என்றும் ஒலிவாங்கி வேலை செய்யாததால் அவர் பேசமுடியவில்லையென்றும் சொல்லப்படுகிறது.
இந்நிகழ்வு தொடர்பான செய்திகள் வேகமாகப் பரவின.அதைத் திட்டமிட்டுப் பரப்புவது விஜய்யின் மக்கள் தொடர்புக்குழுவினர் தாம் என்றும் அவர்கள் இவ்வாறு செய்யக் காரணம்,திருச்சி கிழக்கு தொகுதியில் த்ரிஷா போட்டியிடவிருக்கிறார் என்பதன் முன்னோட்டம்தான் என்றும் விமர்சனங்கள் வரத்தொடங்கியிருக்கின்றன.
இதனால்தான் திருச்சி கிழக்கு தொகுதியில் த்ரிஷா போட்டியிடவிருக்கிறார் என்கிற தகவலுக்கு உயிர் வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
– இராசன்


