
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி உருவான 2011 இல் இருந்து நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரே வெற்றி பெற்று வந்தார்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில்,கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,அக்கட்சியில் இருந்து விலகியதுடன்,சமஉ
பதவியையும் துறந்தார்.உடனே ஆளும்கட்சியில் இணைந்தார்.இப்போது அக்கட்சியின், விராலிமலை தொகுதியை உள்ளடக்கிய மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
விராலிமலை உள்ளிட்ட 5 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில்,
விஜயபாஸ்கர் சார்பில் எவர்சில்வர் பாத்திரம், குலோப் ஜாமூன் டின், தவெக சின்னமான விசில் ஆகியவற்றை விஜயபாஸ்கர் படத்துடன் கூடிய துணிப்பையில் வைத்துத் தொகுதி முழுவதும் அவரது ஆதரவாளர்கள் விநியோகித்து வருகின்றனர்.
இதுகுறித்து விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கூறும்போது,இடைத்தேர்தலில் தவெக சார்பில் விஜயபாஸ்கரே
போட்டியிடுவார்.அதற்காக தொகுதி முழுவதும் தீவிரமாக விளம்பரம் செய்து வருகிறோம்.வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பரிசுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றனர்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி
கூறியதாவது….
விராலிமலை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கவில்லை.வேட்பாளர் அறிவிக்கவில்லை.ஆனால்,முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எவர்சில்வர் பெரிய பாத்திரம்,அதற்குள்
ஸ்வீட் பாக்ஸ்,ரசகுல்லா டின் ஆகியவற்றை வைத்து வீட்டுக்கு வீடு கொடுத்துள்ளார்.ஒரு வீட்டுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை முதல்கட்டமாக விநியோகிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இதுதான் தூய்மையான ஆட்சியா?.ஓட்டுக்கு எதுவுமே கொடுக்கமாட்டோம் என்றார்கள்.ஆனால்,விஜயபாஸ்கர் 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வீடு தவறாமல் பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.அதுதவிர
மற்றவர்களுக்கு எல்லாம் ரொக்கமாக பணம் கொடுக்கிறார்.தேர்தல் எப்போது வருமோ தெரியவில்லை.இப்பவே
பட்டுவாடா ஆரம்பிச்சிட்டாங்க.எத்தனை கோடியை அங்கே கொட்டப் போகிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விஜய்க்கு மக்கள் செல்வாக்கு நிறைய இருக்கிறதென்று சொல்லப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.அதனால் பணம்,பரிசு கொடுத்துத்தான் வெற்றி பெற முடியும் என்றெண்ணி இப்போதே பணத்தை அள்ளி இறைத்துக்கொண்டிருகிறார் விஜயபாஸ்கர் என்கிற விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.


