
தமிழ்நாடு நாள் கொண்டாடுவதில் இருவேறு கருத்துகள் உருவாகிவிட்டன.1947 தொடங்கி 1956 வரை மொழிவழி மாநிலக்களுக்காக நடந்த முயற்சிகள் அதிகம்.எண்ணற்ற போராட்டங்களுக்குப் பிறகு பல பகுதிகளை இழந்து ஒரு வழியாகத் தமிழ்நாடு மாநிலமாக ஓர் அரசைப் பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகள் இழந்து எஞ்சிய குமரிமாவட்டம் தாய்நில அரசோடு 1956 நவம்பர் 1ஆம் நாள்தான் இணைந்தது.இந்த நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடவேண்டும் என்பது ஒரு கருத்து.
அதேபோல்,தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கும் பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.
1956 இல் மொழி மாநிலமாகப் பிரிந்ததிலிருந்து 1968 வரை பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு பெயர் வைப்புக்காகப் போராட வேண்டியிருந்தது.சங்கரலிங்கனார் அதற்காக உண்ணாநோன்பு இருந்து ஈகியாக உயிர் துறந்தார்.
காங்கிரசுக் கட்சி தமிழ்நாடு பெயரைக் கடுமையாக மறுத்தது.பொதுவுடைமைக் கட்சியும்,தி க வும்,திமுக வும், தமிழ்அறிஞர்களும் போராடினர்.பெற்ற குழந்தைக்குப் பெயர் வைப்பது போன்று எளிதாகத் தமிழ்நாட்டின் பெயரை வைத்துவிடமுடியவில்லை.பெரும் போராட்டத்தின் இறுதியிலேயே தமிழ்நாடு பெயர் வைக்கப்பட்டது.
எனவே,தமிழ்நாடு பெயர் வைக்கப்பட்ட சூலை 18 ஆம் நாளும் கொண்டாடப்பட வேண்டிய நாள்தான் என்பது இன்னொரு கருத்து.
ஆகிய இருவேறு கருத்துகள் உருவாகிவிட்டன.
இந்நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் நாள், முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவில்….
தமிழரின் தொன்மை, வரலாறு,பண்பாடு,மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில்,தமிழ்மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும்,தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக,சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி,கல்வியிலும், தொழில்நுட்பத்திலும்,திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தமிழின் இனிமையும்,தமிழரின் உயரியபண்பாடும்,மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும்.தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதன்படி நாளை தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை….
தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பின்படி,நவம்பர் 1 ஆம் நாள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள்
கொண்டாடப்படவுள்ளது.
சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கும் இவ்விழாவில்,பள்ளிக்கல்வி,தமிழ் வளர்ச்சி,செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன்,5 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்தமைக்கான நூலுரிமைத்தொகை வழங்கிடவும்,திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிடவும்,தமிழ்ச் செம்மல் விருதுகள் 76 அறிஞர்களுக்கும் வழங்கியும் சிறப்பிக்க உள்ளார்.
மேலும், நவம்பர் 1 ஆம் நாள் மாலை தமிழ்நாடு நாள் விழாவையொட்டி கலை பண்பாட்டுத் துறை வாயிலாக நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பான முறையில் நடத்தப்படும். தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி,தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
