
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) இணைப் பேராசிரியராகவும் (Associate Professor), முன்னணி பொருளாதார மற்றும் வளர்ச்சி ஆய்வாளராகவும் பணியாற்றி வருபவர் முனைவர் ஏ.கலையரசன்.
தில்லியிலுள்ள,புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) பொருளாதாரப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் கீழ் இயங்கும் தேசிய மனிதவள பொருளாதார ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (NILERD) பணியாற்றியவர்.
இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் (King’s College London) வருகைதரு ஆராய்ச்சியாளராகவும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் லக்ஷ்மி மிட்டல் தெற்காசிய மையத்தில் ஆய்வாளராகவும் இணைந்து செயலாற்றியுள்ளார்.
சாதி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார அமைப்புகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள்,பிராந்திய வளர்ச்சி (Regional Development), அரசியல் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புச் சந்தை குறித்த ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்தியா மற்றும் அமெரிக்காவில் நிலவும் சாதி மற்றும் இன ரீதியான சமூகக் கட்டமைப்பு வேறுபாடுகளை ஒப்பிடும் சர்வதேச ஆய்வுத் திட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.
பேராசிரியர் மு.விஜயபாஸ்கர் அவர்களுடன் இணைந்து இவர் எழுதிய‘The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu’(கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் – 2021)எனும் நூல் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்.தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும்,திராவிட இயக்கத்தின் சமூகநீதிக்கான அரசியல் திரட்சிக்கும் இடையே உள்ள தொடர்பை தரவுகளுடன் விளக்கும் மிக முக்கியமான ஆய்வு இது.
தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதையையும்,சமூகநீதியையும் தரவுகளுடன் உலக அரங்கிற்கு எடுத்துரைக்கும் முன்னணி இளம் பொருளாதார அறிஞர்களில் பேராசிரியர் கலையரசன் மிக முக்கியமானவர்.
‘தி இந்து’, ‘ஃப்ரண்ட்லைன்’, ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி’ (EPW) போன்ற தேசிய மற்றும் சர்வதேச நாளிதழ்கள் மற்றும் ஆய்விதழ்களில், பொருளாதார வளர்ச்சி சார்ந்த பல கட்டுரைகளை எழுதி வருகிறார். தொலைக்காட்சி, யுடியூப் பேட்டிகளும் அளித்து வருகிறார்.
இவரை,நேற்று அதிகாலை 5 மணி அளவில் சீருடை இன்றி வாடகைவண்டியில் வந்த காவல்துறையினர்,உடை மாற்றக்கூட அனுமதிக்காமல், மொபைல் போனை பறித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். மூன்று மணி நேரம் கழித்து வீட்டிலேயே இறக்கி விட்டிருக்கின்றனர்.
இந்த அடாவடிக்கு,கலையரசன் தனது இன்ஸ்டா கணக்கில்,பல்லாவரம் சமஉ குறித்து அவதூறாகப் பதிவிட்டார் என காரணம் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால்,இவரது சமீபத்திய செயல்பாடுகள் காரணமாக இவருக்கு மிரட்டல் விடுக்கவே விஜய் அரசு இந்த வேலையைச் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அப்படி என்ன செய்தார்?
சமீபத்தில்,தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தமிழ்நாட்டின் கடன் அளவைக் காட்டிலும் மாநிலஅரசின் சொந்த வருவாய் ஈட்டும் திறன் குறைந்து வருவதே முதன்மையான சவால்’ என்று சுட்டிக்காட்டினார்.
ஜிஎஸ்டி (GST) அமலாக்கம், முத்திரைத்தாள் கட்டண வருவாய் சரிவு மற்றும் மத்திய அரசின் நிதிப்பகிர்வு அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றால் தமிழ்நாட்டின் பாரம்பரிய பொருளாதாரக் கட்டமைப்பு சவாலைச் சந்திப்பதாகக் குறிப்பிட்ட்டார்.
தவெக-வின் வெற்றி குறித்து ‘மக்கள் முந்தைய ஆட்சிகளின் மீதிருந்த அதிருப்தியினால் வழங்கிய தீர்ப்பாக இருக்கலாம்.ஆனால் திராவிட சமூகநீதி மாடலின் முடிவு அல்ல’ என்றும் தெளிவுபடுத்தினார்.
விலைவாசியைக் கட்டுப்படுத்துவது என்பது அதிக அதிகாரம் மத்திய அரசு – ரிசர்வ் வங்கியின் கையிலேயே உள்ளது.ஆனாலும்,கூட்டுறவு அமைப்புகள்,பொது விநியோகத் திட்டம் மூலமாக அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம்.இடைத்தரகர்களின் தலையீட்டை கட்டுப்படுத்தலாம்.அதற்கான உரிமைகள் மாநில அரசுக்கு உண்டு.இவற்றைச் செய்தால் விலைவாசி உயர்வு மட்டுப்படும் என்றார்.
இவற்றோடு,”வரலாறு காணாத அளவுக்கு தற்போதைய ஆட்சியில் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்திருக்கிறது” என்கிற உண்மையை உடைத்துச் சொன்னார்.
இதனாலேயே அவர் மிரட்டப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவெக எம்.எல்.ஏ.வை அவதூறு செய்தார் என்று புகார் கூறினார்கள்.இவருக்கு இன்ஸ்டா கணக்கே இல்லை.அப்படியானால் இவர் மீது புகார் கொடுத்தவர் யார்? புகாரின் உண்மைத் தன்மையை காவல்துறை ஏன் ஆராயவில்லை?அதிகாலையில் உடുப்பை மாற்ற அனுமதிக்காமல்,மொபைல் போனை பறித்துக்கொண்டது ஏன்? சீருடை அணியாத காவல்துறையினர் வாடகை வண்டியில் வந்து இழுத்துச் சென்ற மர்மம் என்ன? எந்த விசாரணையும் செய்யாமல் திரும்பக் கொண்டு வந்து வீட்டில் விட்டது ஏன்?
என்கிற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி செயலாளர் பெ.சண்முகம் நேற்றிரவு கூறியிருப்பதாவது…
சென்னை வளர்ச்சி மையம் MIDS பேராசிரியர் கலையரசன் அவர்கள் இன்று விடியற்காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சீருடை அணியாத காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.
நள்ளிரவு கைது,விடியற்காலை கைது என்பதெல்லாம் காவல்துறை ராஜ்யம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.புகார் இருந்தால் முறையாக வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பி விசாரித்து இருக்கலாம். பிரபலமான பேராசிரியரை இப்படி நடத்தி இருப்பது சகித்துக் கொள்ள முடியாதது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
