மறைந்த நல்லகண்ணுவை சிறுமைப்படுத்தும் சிங்காரம் திரைப்படம் – விவரம்

நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள சிங்காரம் எனும் திரைப்படத்தை இயக்குநர் கே.வி.கதிர்வேலு இயக்கியுள்ளார்.இப்படத்தில் யோகி பாபுவுடன்,வேல ராமமூர்த்தி,எம்.எஸ்.பாஸ்கர்,மரியா வின்சென்ட்,ஆர்த்தி கணேஷ்,மனோபாலா,கல்கி,மாரிமுத்து,படவா கோபி,சென்ட்ராயன்,டி.எஸ்.ஆர்.,தீபா சங்கர்,சபிதா ராய், ஜாவா சுந்தரேசன்,கே.எம்.கணேஷ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இசை – சாம் சி.எஸ்,பாடல்கள் – விவேகா,ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ்.குமார்,படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்,கலை இயக்கம் – குருராஜ்,சண்டைப் பயிற்சி – ஃபேன்டம் பிரதீப் ஏ.எஸ்.

ராக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஏ.எஸ். ரமண பாலாஜி,பத்மாவதி காந்தி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல்,வரலாற்றுப் பின்னணி,சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் மற்றும் உரிமைக்கான குரல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘சிங்காரம்’ உருவாகியுள்ளது.நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை மையமாகக் கொண்டுள்ள இப்படம், சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துப் பேசுகிறது என படக்குழு சொல்லியிருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி பேசினார்.அவர்,இந்தப்படத்தில் பொதுவுடைமைக்கட்சியின் மூத்ததலைவர் நல்லகண்ணு வேடத்தில் நடித்திருக்கிறேன் என்று பெருமிதத்துடன் சொன்னார்.

அதற்கடுத்து அவர் கூறிய தகவல் சர்ச்சைக்குள்ளானதாக இருக்கிறது.

அவர் கூறியதாவது…

ஒரு காட்சியில் நான் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டிருப்பேன்,அப்போது மறைந்த நடிகர் மாரிமுத்து வருவார்.அவர் என்னால் நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்.அவர் தவறு செய்திருக்கிறார் எனும் தகவலறிந்து அவரை வரச்சொல்லியிருப்பேன்.அவர் வந்ததும் அவர் கன்னத்தீல் ஓங்கி ஓர் அறைவிடுவது போன்ற காட்சி.அதில் நடிக்கும்போது நான் உண்மையாகவே அவரை அடித்துவிட்டேன் என்று பேசியிருந்தார்.

இதுதான் சர்ச்சையாகியிருக்கிறது.

நல்லகண்ணுவாக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஊஞ்சலில் ஆடுவதும்,தம் கட்சி சட்டமன்ற உறுப்பினரை அடிப்பதும் ஆகிய காட்சிகள் மறைந்த தலைவர் நல்லகண்ணுவை சிறுமைப்படுத்தும் விதமான காட்சிகள்,அவை படத்தில் இடம்பெறக்கூடாது என பொதுவுடைமைக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.இதுதொடர்பாக படக்குழுவிடம் பேசப்போவதாகவும் அவர்கள் அக்காட்சிகளை நீக்கவில்லையெனில் அடுத்தகட்டம் என்ன என்பது பற்றி முடிவெடுப்போம் என்கின்றனர்.

Leave a Response