
வடசென்னைக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய குழந்தைகள் மையத்தினை நிதியமைச்சர் மரியவில்சன் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
2003 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்தே நடிகர் தனுஷை எனக்கு நன்றாகத் தெரியும்.அவருக்கு திருமணம்
நடந்ததில் இருந்து நான் அவருக்கு நெருக்கமானவர்.தனுஷ் அரசியலுக்கு வர வாய்ப்புகள் மிகவும் குறைவு.தமிழக முதல்வரின் ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றை வாசகமே போதுமானது.முதல்வருக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.இங்கே முதல்வர் விஜய் என்பதுதான் எதார்த்தம்.
கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் சேர்த்து,மக்கள் மிகச்சிறந்த ஒரு பாடத்தை வழங்கியுள்ளனர்.
இது ஒரு ஜனநாயக நாடு.யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்.யார் வேண்டுமானாலும்
தேர்தலில் போட்டியிடலாம்.அது முழுக்க முழுக்க அவரவர்களின் சொந்த முடிவு.
தனுஷை வைத்து அரசியல் களத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.ஆனால், அங்கே திருப்புமுனை எதுவும் இருக்காது,ஏமாற்றம்தான் மிஞ்சும்.
ரஜினிகாந்தை வைத்து பிரச்சாரம் செய்தால் மக்கள் அப்படியே மாறிவிடுவார்கள் என்று சொல்வதற்கெல்லாம் காலம் தக்க பதிலைக் கொடுத்துவிட்டது.எனவே,யார் பிரச்சாரம் செய்தாலும்,மக்கள் ஏற்கெனவே தங்களுடைய தீர்ப்பை முழுமையாக வழங்கிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரின் பதிலில்,நடிகர் ரஜினி பற்றி கூறிய கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன.ரஜினியின் மதிப்பை அறியாமல் பேசுகிறார்.ரஜினி பெருந்தன்மையாக எல்லாவற்றையும் கடந்து போகிறார்,ஆனால் அவரை சீண்டும் விதமாக அமைச்சர்கள் இவ்வாறு பேசுவது சரியல்ல.அண்மையில் விஜய் மேடையில் இருக்கும்போதே ஒரு அமைச்சர் ரஜினி பற்றி விமர்சனம் செய்தார்,இப்போது இன்னொருவர் இப்படிப் பேசியிருக்கிறார்.இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ரஜினி இரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.


