கமல் படப்பெயருக்கு கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு – விவரம்

நடிகர் கமலின் பிறந்தநாள் நவம்பர் 7.அதையொட்டி நவம்பர் 6 அன்று அவர் நடிக்கும் புதியபடத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.

எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் அப்படத்துக்கு ‘சண்டியர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது….

மூத்த நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது புதிய படத்துக்கு ‘சண்டியர்’ என பெயர் சூட்டியிருக்கிறார்.2003 இல் இதே பெயரை வைத்தபோது இரு சமூகங்களிடம் பிரச்சினையை ஏற்படுத்தியது. இந்தத் தலைப்பை கைவிட கூறி நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவுரையை ஏற்று ‘சண்டியர்’ படப் பெயரை கமல்ஹாசன் கைவிட்டார்.

23 வருடங்கள் கழித்து இப்போது ‘சண்டியர்’ என அதே பெயரில் படம் எடுப்பதாக கமல்ஹாசன் சொல்லியிருக்கிறார்.அன்று கமல் சாதாரண நடிகர்,இன்று நாடாளுமன்ற உறுப்பினர்,அரசியல் கட்சித் தலைவர். அவருக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன.சாதி,மதம்,மொழி சார்பாக இருக்கமாட்டேன் என உறுதிமொழி கூறி நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பொறுப்பு ஏற்றுள்ளார்.

சண்டியர் என்கிற பெயர் சாதிய மோதலைத் தூண்டக் கூடிய பெயர்.பழிக்குப் பழி என்ற கருத்தில் அமைக்கப்பட்டது.‘ரத்தத்தின் கடனை ரத்தத்தால் தான் தீர்ப்போம்’ என்ற வன்முறை எண்ணத்துடன் வெளியாகும் திரைப்படங்களை புதிய தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது.

தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி இந்தப் பெயரை திரும்ப பெற கோரிக்கை வைப்பேன். ஒன்றிய அரசிடமும் வலியுறுத்தப்படும்.சண்டியர் தலைப்பில் படம் வெளியானால், திருநெல்வேலி,தூத்துக்குடி,இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் சாதிய மோதல் தலைதூக்கும்.

கமல்ஹாசனிடம் நீங்கள் எடுங்கள்,நாங்கள் பின்புலமாக இருக்கிறோம் என யாரோ சொல்லியிருக்கின்றனர். ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட பெயரை அனுமதித்தது தயாரிப்பாளர் சங்கத்தின் தவறு.‘சண்டியர்’ பெயரை திரும்பப் பெற தயாரிப்பாளர் சங்கத்தை நேரில் சென்று வலியுறுத்துவேன்.

முதல்வர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கமல்ஹாசனை அழைத்துப்பேசி இந்தத் தலைப்பை மாற்ற வைக்க வேண்டும்.

சண்டியர் பெயரில் படம் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.இதற்கு சட்டரீதியான தீர்வு காண முயற்சி எடுக்கப்படும்.
அமைதியை சீர்குலைக்கும் முயற்சியாகவே இந்த ‘சண்டியர்’ படம் இருக்கிறது. ‘சண்டியர்’ என்ற பெயர் தாங்கிய படத்தை எடுக்க விடமாட்டோம்.சட்ட ரீதியாகவும் போவோம்,அனைத்து வழிகளிலும் போராடுவோம்.கமல்ஹாசன் ‘சண்டியர்’ என்ற படத்தை எடுத்தால் அவர் தமிழகத்தை விட்டே ஓட வேண்டி இருக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response