
அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்துகள் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது 2021 ஆம் ஆண்டு இலஞ்ச ஒழிப்புத்துறை அமலாக்கத்துறை ஆகியன வழக்குப் பதிவு செய்து,40 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது.
இந்தவழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத் துறை கடந்த வாரம் அழைப்பாணை அனுப்பியது.அதன்காரணமாக, நேற்று அமலாக்கத்துறையின் சென்னை மண்டல அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன் இருவரில் ஒருவர் நேர்நின்றிருக்க வேண்டும். ஆனால் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று நேர்நிற்கவில்லை.
இருவரில் ஒருவர் நேரில் வருவார்கள் என்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் வரவில்லை.
இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி மோசடி தொடர்பாக அடுத்தக்கட்டமாக அவர்கள் மீது மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை குறித்து அழைப்பாணை அனுப்புவதா? அல்லது கைது செய்வதா? என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இன்னொருபுறம்,நேரில் வந்தால் கைது நடவடிக்கை இருக்கக்கூடும் என்பதாலேயே வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.இதனால் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் பெரும் பதட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்போது விஜயபாஸ்கர் ஆளும்கட்சியில் இருக்கிறார்.இதனால்,ஆளும்கட்சியைச் சேர்ந்தவரே சட்டத்தை மதிக்காமல் இருப்பதா? என்கிற விமர்சனங்கள் வருகின்றன.
அமலாக்கத்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டால் விஜயபாஸ்கரை தவெகவில் இருந்து நீக்குவது குறித்த ஆலோசனைகளும் நடந்துவருகின்றன எனச் சொல்கிறார்கள்.


