
அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் சி.விஜயபாஸ்கர்.தற்போது தவெக புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக உள்ளார்.
இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாகப் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின் கீழ் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2024 ஆம் ஆண்டு சோதனை மேற்கொண்டனர்.
அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில்,விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி, விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில்,இந்த வழக்கில்,விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை,இரண்டாண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இதில் ஒருவரை, சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி நேர்நிற்குமாறும், மற்றொருவரை அடுத்தவாரம் நேர்நிற்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வு புதுக்கோட்டை பகுதிகளில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.அதற்குக் காரணம்,விரைவில் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது.இந்நிலையில் அத்தொகுதியில் ஆளும் தவெக சார்பில் விஜயபாஸ்கர் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை விசாரணை தொடங்குகிறது.
இது,அவரை போட்டியிடாமல் தடுக்க ஆளும் தவெகவின் இன்னொரு பிரிவினர் செய்யும் சதி என்கிற பேச்சுகள் உலவிக்கொண்டிருக்கின்றன.இது உண்மையா? பொய்யா? என்பது போகப்போகத் தெரியுமென்கிறார்கள்.
– பாணன்


