
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,நெல்லையில் நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக நேற்று சென்றார்.
அங்கு அவர் அளித்த பேட்டி….
வரவிருக்கும் 5 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.அம்பாசமுத்திரம் தொகுதியில் நானே போட்டியிடுகிறேன்.நவம்பர் 26 தலைவர் பிறந்தநாள்,நவம்பர் 27 மாவீரர்நாள் வணக்கம் ஆகியவை நடக்கும்.அதன்பின்,தேர்தல் பணிகளைத் தொடங்குகிறோம்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் செல்லவேண்டும் என்பதே எனது தற்போதைய இலக்கு.என்னை வெற்றிபெற விடக்கூடாது என்ற தீவிரத்துடன் தவெக வேலை செய்வார்கள்.வெற்றி,தோல்வியைத் தீர்மானிப்பது தேவை என்ற ஒன்று மட்டும்தான்.எனக்கு வெற்றி என்பது தேவை.தற்போது அவர்கள் வெற்றி மிதப்பில் இருக்கிறார்கள்.
மற்றகட்சிகளின் ஆதரவு என்பது,பசியில் இருப்பவனுக்கு பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வானா?. அதுபோல்தான் மற்ற கட்சிகள் எனக்கு ஆதரவு கொடுத்தால் நான் வேண்டாம் என்றா சொல்வேன்?.எங்களை ஜீரோகட்சி என விமர்சிப்பவர்கள் ஏன் எங்களைக் கண்டு அஞ்சவேண்டும்.எந்த மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்தனரோ அது தற்போது நடந்துவிட்டதா?.விஜய் திரைப்புகழால் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். திரைக்கவர்ச்சி மங்கும்.இலட்சியக் கவர்ச்சி பொங்கும்.
மின்கட்டண உயர்வு,அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்கிறது.6 மாதங்களில் ரூ.60 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடிவரை தவெக அரசு கடன் வாங்கியுள்ளது.தாய்மாமன் சீர் திட்டத்தில் மோதிரம் வழங்குவதற்காக ஒதுக்கியுள்ள ரூ.785 கோடியை அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம்.பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி சிங்கப்பெண் திட்டம் கொண்டு வந்தனர்.ஆனால் செஞ்சியில் 7 வயது சிறுமி எங்கே?.சிங்கப்பெண் என்ன செய்து கொண்டிருக்கிறது?.பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.ஆண்கள் மீது தொடர் தாக்குதல் அதிகரித்தால் ஆண் சிங்கம் என படையை அறிவிப்பீர்களா?
முதலமைச்சர் விஜயையும்,காமராஜரையும் அமைச்சர் விஸ்வநாதன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.விஜய்யுடன் காமராஜரை ஒப்பிட்டுப் பேசுவதன் மூலம் அவரை அவமதிக்கக் கூடாது.தவெகவிடம் தெளிவான திட்டமோ, கொள்கையோ இல்லை.நடிகராக இருந்தபோது மற்றவர்களுடன் விமானத்தில் பயணம் செய்த விஜய், முதலமைச்சரான பிறகு தனிவிமானத்தில் பயணம் செய்வது ஏன்?.அந்த பயணத்திற்கான செலவை யார் ஏற்கிறார்கள்.இதுதான் காமராஜர் ஆட்சியா?.தேர்தல் ஆணையம்,உளவுத்துறை,காவல்துறை என அரசு இயந்திரம் முழுவதும் தவெகவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது.
நடிகர்களில் அரவிந்த்சாமி,பிரகாஷ் ராஜ்,விஜய் சேதுபதி ஆகியோருக்கு அரசியல் குறித்த புரிதல் இருக்கிறது.
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தில் சிறைத்துறை அதிகாரியை மாற்றியுள்ளனர். இதற்குப் பொறுப்பான அமைச்சர் ஏன் பதவி விலகக்கூடாது.முதலமைச்சர் ஒரு நிகழ்ச்சிக்கு வரும்போது பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுதான் மக்கள் விரும்பும் நல்லாட்சியா?.
இப்போது அவையில் சவுமியா அன்புமணி,பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பேசிக் கொண்டிக்கிறார்கள். அவங்களுக்கு இடையில் இன்னொரு வலிமையான குரல் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். நாங்களும் அதை நினைக்கிறோம். இதை என்னிடமே, எப்படியாவது நீ உள்ள போயிடுயா என்று சொல்கின்றனர். நான் மட்டும் சட்டப்பேரவைக்குச் சென்றால் ஆல் இஸ் வெல், துள்ளாத மனமும் துள்ளும், காவலன், எதிரிக்கு ஆகும் மெர்சல் எனப் பேசுவோருக்கு பார்சல்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.


