கள்ளக்குறிச்சி சமஉ செயல்படவிடமாட்டோம் – பாலபாரதி ஆவேசம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதல்வர் விஜய்யின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சர்மா நகர் பகுதியில் அமைந்துள்ள,முதல்வரின் பெரம்பூர் சட்டமன்ற அலுவலகம் அருகே நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில்,மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி உள்பட ஏராளமான மகளிர் கலந்துகொண்டனர்.

பின்னர், பாலபாரதி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….

கடந்த சில மாதங்களில் பெண்கள்,குழந்தைகள் காணாமல் போவது,பாலியல் கொடுமைகள் நடப்பது எல்லாம் இயல்பான நடவடிக்கையாக தவெக ஆட்சியில் மாறிக்கொண்டு இருக்கிறது.

இத்தகைய சூழலில்,மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்தநிலை என்றால்,தமிழகத்தில் உள்ள சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கமுடியும்? மாவட்ட ஆட்சியர் நினைத்திருந்தால் அந்த எம்எல்ஏவை உடனடியாகக் கைது செய்திருக்க முடியும்.இரண்டு மாதமாக இதை வெளியில் விடாமல் பாதுகாத்து இருப்பது எவ்வளவு அருவருப்பானது.நியாயமாக தமிழ்நாடு அரசு அந்த பெண் ஆட்சியரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த பிரச்னையை வீடு வீடாகக் கொண்டு செல்வதுடன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செயல்பட முடியாத அளவிற்கு அவரது காரை வழிமறித்துப் போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response