
நேற்று திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் சிவகுமார் தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். மேகதாது அணை கட்டுவோம்,தமிழகத்துக்குத் தண்ணீர் தரமாட்டேன் என கூறும் காங்கிரசு தயவில்தான் தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.
உரிமையைப் பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்தில் எதை அவர்களால் காப்பாற்ற முடியும்? மேகதாது விவகாரம் குறித்து என்னிடம் கேட்டால் நான் இதற்கு என்ன பதில் கூறுவேன்.நான் ஜீரோ, ஹீரோ எனக் கூறுபவரிடம் இதைக் கேளுங்கள்.
முதல்வர் எதையும் பேசமாட்டார்,ஆனால் செயலில் காட்டுவார் எனக் கூறுகிறார்கள் அவர் காட்டிய செயல் ஏதாவது ஒன்றைக் கூறமுடியுமா? சிறுமி காணாமல் போன விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.கள்ளக்குறிச்சி சமஉ மாவட்ட ஆட்சியருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறும் விவகாரத்தில் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள்.
புகார் மனு அளிக்க வந்த நபரை சட்டப்பேரவை துணைத்தலைவர் தாக்கியுள்ளார்.அந்தப் பொறுப்புக்குத் தகுந்ததுபோல் அவர் செயல்படவில்லை அவரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்குவதற்குக் கூட முதல்வருக்குத் துணிவில்லை.அவர் எப்படி தூயசக்தி எனக் கூறுவார்?
பலபேரைத் தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரால்,சமஉ அருள் விக்னேசை தகுதி நீக்கம் செய்யமுடியாதா? அவரை தகுதி நீக்கம் செய்து அந்தத் தொகுதியில் தேர்தல் வைத்தால் மீண்டும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் எப்படி தலைவர்? மாஸ் லீடர்?
மக்களைச் சந்திக்க எதற்குப் பயப்படவேண்டும்.வென்றால்தான் நாங்கள் களத்தில் இருப்போம்,தோல்வி அடைந்தால் ஓடிவிடுவோம் என இருப்பது நியாயமா? தோல்வி அடைந்தாலும் களத்தில் இருப்பவன்தான் வீரன்.பெரும்பான்மை முக்கியமல்ல.உண்மையும்,நேர்மையும்தான் முக்கியம்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


