
புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….
50 முதல் 60 தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.குதிரை பேரத்தில் திமுக ஈடுபட வேண்டிய அவசியமே கிடையாது.திமுகவிடம் இன்றைக்கு யாரையும் வாங்க கூடிய அளவுக்கு பணம், காசு கிடையாது.குதிரை பேரத்துக்கு வாய்ப்பு கிடையாது.ஆனால்,மனமாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி திமுகவுக்கு உண்டு.இன்றைக்கு மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களைக் கண்டு தவெக சட்டமன்ற உறுப்பினர்களே சுமார் 60 அல்லது 70 பேர் சேர்ந்து தனியாக ஆட்சி நடத்தினால் நல்ல ஆட்சி நடத்த முடியும் என்ற ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.அது உறுதி செய்யப்பட முடியாத ஒன்று.
அதைத்தான் அதிமுகவினரும் 30 பேர் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்து வருகின்றனர்.அப்படி தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்து வெளியே வந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறபோது அங்கே ஆட்சி மாற்றம் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.அதேநேரத்திலே,திமுகவுக்கு வாய்ப்பும் இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அதிருப்தியில் இருக்கிறவங்களை திருப்திப்படுத்தப் பார்க்கிறாங்க.திருப்திப்படுத்த முடியாத சூழ்நிலையில் முன்வரிசைத் தலைவர்களிலேயே ஒரு சிலர் ஒன்று சேர்ந்து தனியாக ஒரு அமைப்பு அமைப்பதற்கான வாய்ப்பு சட்டப்படி உண்டு.ஏன் என்றால் 109 தான் அவர்களுடைய எண்ணிக்கை.அதில் 60 பேர் வெளியே வந்து விட்டால், பாதிக்கு மேல வந்ததாக அர்த்தம்.எனவே பாதிக்கு மேல் வந்தால் அதுதான் பெரிய கட்சி. அதனால் அந்த மாதிரியான சூழல் உருவாக்குகிறபோது அங்கே ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.அல்லது ஆளுநர் தலையிட்டு சட்டமன்றம் சஸ்பெண்ட் செய்யப்படலாம்.சட்டமன்றம் சஸ்பெண்ட் செய்யப்படுகிற போது ஜனாதிபதி ஆட்சி, கவர்னர் ஆட்சிதான் நடக்கும்.அதற்குப் பிறகு சட்டமன்றத்தில் யாருக்காவது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.அப்படி நிரூபிக்கப்படாவிட்டால் மீண்டும் தேர்தல்தான் வரும்.அந்தத் தேர்தலிலே திமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்கின்ற நம்பிக்கையும் எங்களுக்கும் இருக்கிறது,தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரகுபதியின் இந்தப் பேட்டியைத் தொடர்ந்து,தவெக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தனிஅணி அமைத்து திமுக ஆட்சியமைக்க ஆதரவு தரவிருக்கிறார்கள் என்கிற தகவல் பரவி அரசியலரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.


