தமிழர் பெருமையை மறைக்கும் மோடி அரசு – பழ.நெடுமாறன் கண்டனம்

இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணா, டிசம்பர் 19, 20 ஆம் தேதிகளில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் அனுமதிக்கு தேவையான தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு, ஏ.எஸ்.ஐ. இயக்குநர் அவருக்கு எழுதிய கடிதத்தில், “ஏ.எஸ்.ஐ. அல்லது இந்திய அரசின் செயல்பாடு, கொள்கைகள் அல்லது நற்பெயரை விமர்சிக்கும் எந்த கருத்தையும் நீங்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
அவரது விவாதங்களில் ஏ.எஸ்.ஐ. அல்லது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்லது கொள்கைகளுக்கு எதிராக எதுவும் இருக்கக் கூடாது. நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். உறுதிமொழி கிடைத்தவுடன்வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் அனுமதிக்குத் தேவையான தடையில்லா சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணா அந்த உறுதிமொழியை தர மறுத்துவிட்டதாகவும் அதனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒன்றிய அரசின் இந்தச் செயலுக்குக் கடும் எதிர்ப்புகள் வந்துள்ளன.

இதற்கு,உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்
பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

வைகைக் கரை கீழடி அகழாய்வின் மூலம் தமிழர் நாகரிகத்தின் தொன்மை கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு முந்தியது என்பதை முதன்முதலாகக் கண்டறிந்து கூறிய இந்தியத் தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் இராமகிருட்டிணன், “மலேசியாவில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் வரலாற்று ஆய்வு மாநாட்டில் பங்கேற்பதற்கு இந்திய அரசு அனுமதிக்க மறுத்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.”

தமிழர் வரலாற்றின் தொன்மையை இத்தகைய தடைகளின் மூலம் மறைத்துவிட முடியாது. அறிவியல் மிக ஓங்கி வளர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில், இத்தகைய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளின் மூலம் உண்மைகளை மறைக்கச் செய்யும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் நடைபெற்ற பல கருத்தரங்குகளில் அமர்நாத் இராமகிருட்டிணன் ஆற்றிய ஆய்வுரைகள் உலகமெங்கும் பரவியுள்ளன. அவற்றை மீண்டும் மலேசிய மாநாட்டில் ஒளிபரப்புவதை இந்திய அரசு தடுத்துவிட முடியாது.

2023ஆம் ஆண்டு தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நடத்திய தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை மலேசிய மாநாட்டுக் குழுவினருக்கு உலகத் தமிழர் பேரமைப்பு அனுப்பி வைத்து, அதை அங்கு ஒளிபரப்பச் செய்வோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response