எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி சுடச்சுட பதிலடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கொடுத்த பேட்டியொன்றில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை இரண்டு கோடி தொண்டர்களில் ஒருவர்தான் வேலைமணி எனக் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்து எஸ்.பி.வேலுமணி கூறியிருப்பதாவது…..

இரண்டு கோடி தொண்டர்களுள் ஒருவன்தான் வேலுமணி.

என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும்,இதைவிட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது?

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பதுதான் என்னுடைய முதல் அடையாளம்.இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல.

என்னைத் தொண்டரில்ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கு நன்றி.

இந்த இரண்டு கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டுதான் தாங்கள் இன்றைக்கு பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள்.

கொடிபிடிக்கும் அந்தத் தொண்டன்தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர்.அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும்.அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்…..
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.அதை ஒரு நல்ல தலைமை உணரவேண்டும்.

ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு.

கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இருப்பார்.கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் கான்வாயே வந்து நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத்தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள்; மதித்தார்கள்!

“இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே,இரண்டு கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள்.

திருமதி.வி.கே. சசிகலா,திரு.டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள்.

முன்னாள் முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம்,முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுக-வுக்குச் செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை.அதற்குமுன் பலமுறை,தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்கவேண்டும் என்றுதான் பல முயற்சிகளை எடுத்தார்கள்.

அதேபோல்,இன்றைக்கு மாண்புமிகு அமைச்சராக இருக்கும் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவராக உள்ள திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும்,நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால்தான் அவர்கள் எல்லோரும் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்றார்கள்.

இப்படி,தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை,நீங்கள் எப்போதும் போல உதாசீனப்படுத்தி அனுப்பி வைத்ததால்தான் இன்றைக்கு இந்தநிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணரவேண்டும்.

பொதுச்செயலாளர் அவர்களிடம் எப்போதும் நான் கேட்பது ஒன்றுதான்.வேலுமணி உள்ளிட்ட அந்த இரண்டு கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்.

“தாய்வழி வந்த
தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று
நேர்வழி சென்றால்
நாளை நமதே!”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response