
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் விஜய் 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் முதல்வர் விஜய் தனது வேட்புமனுவில் சொத்துகளை மறைத்துள்ளதாக அத்தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளரான ஆர்.டி.சேகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில்,பெரம்பூர் தொகுதி வாக்காளரான தினேஷ் சார்பில் வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில்,
முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், நீலாங்கரையில் உள்ள தனது பங்களா வாரிசுரிமை மூலம் பெறப்பட்டுள்ளது என கூறுகிறார்.உண்மையில் அந்த சொத்து,2005 ஆம் ஆண்டு அவருடைய தந்தை சந்திரசேகர் பதிவு செய்து கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் பெறப்பட்டுள்ளது.17 ஆயிரத்து 100 சதுர அடி நிலம் மற்றும் 5 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட அந்த பங்களாவின் மதிப்பு பத்திரத்தில் ரூ.2.75 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விஜய் தனது தேர்தல் வேட்புமனுவில்,‘‘அந்த நிலத்தில் 18 ஆயிரத்து 633 சதுரஅடியில் கட்டுமானம் கட்ட ரூ. 18.73 கோடியை செலவிட்டுள்ளதாகவும்,தற்போது அந்த பங்களாவின் சந்தை மதிப்பு ரூ.20 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.
2010 இல் சென்னை போரூரில் சுமார் 34 ஆயிரம் சதுரஅடி பரப்புள்ள விவசாயம் சாரா நிலத்தை ரூ.91.13 கோடிக்கு வாங்கியதாகக் கூறியுள்ளார்.ஆனால் பதிவுத்துறை ஆவணங்களின்படி ரூ.7.5 கோடிக்கு 20 ஆயிரத்து 773 சதுர அடி நிலம் மட்டுமே வாங்கியுள்ளார்.
சென்னை பாடியில் தற்போதைய சந்தைமதி்ப்பில் ரூ.7 கோடி மதிப்புள்ள 11 ஆயிரத்து 854 சதுர அடி கொண்ட வணிக வளாகம் உள்ள இடத்தை 2009 இல் ரூ.1.95 கோடிக்கு வாங்கியதாகவும்,கட்டுமானத்துக்காக ரூ 3.9 கோடியை செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.உண்மையில் 23 ஆயிரத்து 460 சதுர அடி கொண்ட அந்த வணிக வளாகத்தை கடந்த பிப்ரவரி 12 அன்று ரூ.35 கோடிக்கு விஜய் விற்பனை செய்துள்ளார்.
இதேபோல பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்தை விஜய் தனது வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.ஆகவே திட்டமிட்டு,வேண்டுமென்றே சொத்துகளை மறைத்தும்,மதிப்பைக் குறைத்தும் வேட்புமனுவில் தவறான தகவல்களை விஜய் தெரிவி்த்துள்ளதால் அவர் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக்கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி முதல்வர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி,’முதல்வர் விஜய்க்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, கற்பனையானவை, பொய்யானவை, தவறான புரிதல் மற்றும் ஊகங்களின் அடிப்படையிலானவை என்பதால் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும்’ என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பி்ல் பதில் வாதங்களை முன்வைக்க விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும்,சொத்துகளை மறைத்துள்ளதாகவும்,பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை என்றும்,இதுதொடர்பாக தேர்தல் வழக்கில்தான் முழுமையான விசாரணை நடத்தமுடியும் என்றும்,வேட்புமனு பரிசீலனையின்போது ஒரு வாக்காளரால் எந்த ஆட்சேபமும் செய்யமுடியாது என மனுதாரரான தினேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி வி. லட்சுமி நாராயணன்,‘‘நான் நீதிபதியாகி எனது சொத்துகளை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது எனது ஆடிட்டரை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருந்தேன்.அதேபோல முதல்வர் விஜய்யும் தனது சொத்துகளின் பட்டியலை ஆடிட்டரை நம்பி கொடுத்திருப்பார்.அவரது ஆடிட்டர் அந்த சொத்துப்பட்டியலை தயாரித்துக் கொடுத்திருப்பார்.ஆடிட்டர் சில தவறுகளை செய்திருந்தால் அதற்கு முதல்முறையாக தேர்தலி்ல் போட்டியிட்டு முதல்வராகியுள்ள விஜய்யை பொறுப்பாக்கி அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவி்க்க முடியுமா?.திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த விஜய் ரூ.600 கோடிக்கு மேல் தனக்கு சொத்துகள் உள்ளது என சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளார்.ஒரு கோடீஸ்வரரிடம் எங்கெங்கு சொத்துகள் இருக்கிறது எனக்கேட்டால் அவரால் கூறிவிட முடியுமா?.அவர் சில சொத்துகளை மறைத்து விட்டதாகக் கூறுவது அவரது தேர்தல் வெற்றியை செல்லாதது ஆக்கிவிடுமா?’ என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பி தொடர் வாதத்துக்காக வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளார்.
பெரம்பூர் தொகுதி வாக்காளரான தினேஷ் சார்பில் வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன் தாக்கல் செய்திருந்த பிரமாணப்பத்திரத்தில்,’கொடைக்கானல் வில்பட்டியில் உள்ள 50 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்துக்கு உரிமையாளர் என சொந்தம் கொண்டாடுகிறார். வில்பட்டியில் உள்ள அந்த நிலத்தை 1997 இல் ரூ.30ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கியதாகக் கூறியுள்ளார்.அந்த சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.20 இலட்சம் எனக்கூறியுள்ளார்.ஆனால் ‘அ’ பதிவேட்டில் அந்த சொத்து,அரசு புறம்போக்கு நிலம் என உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம்,அரசு புறம்போக்கு நிலத்தை விஜய் ஆக்கிரமித்துள்ளாரா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன.


