மேடைப் பேச்சுக்காக 14 ஆண்டுகள் கழித்து அருந்ததிராய் மீது வழக்கு – மோடி அரசின் அடக்குமுறை

2010 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள எல்டிஜி அரங்கத்தில் ‘விடுதலை – ஒரே வழி’ என்ற தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் உசைன் ஆகியோர் உரையாற்றினார்.

அவர்கள், ஆத்திரமூட்டும் பேச்சுகளை பேசியதாகச் சொல்லி, 2010, அக்டோபர் 28 அன்று காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் உசைன் ஆகியோருக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புகார் மீது இருவருக்கு எதிராகவும் சட்ட விரோதத் தடுப்புச் செயல்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய டெல்லி துணைநிலை ஆளுநர் வி கே சக்சேனா வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இருவர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முஃப்தி வெளியிட்டுள்ள பதிவில்,

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும், பாசிசத்துக்கு எதிராக சக்திவாய்ந்த குரலாக வெளிப்பட்ட துணிச்சலான பெண்மணியுமான அருந்ததி ராய் மீது கடுமையான உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது அடிப்படை உரிமைகளை மீறும் செயல். அதேபோல், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு முன்னாள் சட்டப் பேராசிரியர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது விரக்தியின் செயல் என்று விமர்சித்துள்ளார்.

எழுத்தாளர் அருந்ததி ராய் மீது டெல்லி துணை நிலை ஆளுநர் கொடுத்த வழக்கு அனுமதிக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL ) கண்டனம் தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்….

2010 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் கருத்தரங்கில் பேசியதற்காகப் போடப்பட்ட வழக்கில் இன்று விசாரணை அனுமதியை எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் ஷேக் ஷோகத் உசைன் (காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் சர்வதேசச் சட்டத்தின் முன்னாள் பேராசிரியர்) ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர டெல்லி காவல்துறை அனுமதி வழங்கிய டெல்லி லெப்டினன்ட்-கவர்னர் வினய் குமார் சக்சேனாவின் முடிவை மக்கள் சிவில் உரிமைக் கழகம் ( PUCL) கண்டிக்கிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153A, 153B மற்றும் 505 இன் கீழ் குற்றத்திற்காக ராய் மற்றும் உசைன் மீது வழக்குத் தொடர அக்டோபர் 2023 இல் அனுமதி வழங்குவதற்கான முந்தைய முடிவைப் பின்பற்றி டெல்லி துணை நிலை ஆளுநர் முடிவு செய்துள்ளார். அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய வழக்கு இது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A, 153B மற்றும் 505 IPC ஆகிய குற்றங்களுக்காக ராய் மற்றும் ஹுசைன் மீது வழக்குத் தொடர தற்போது வழங்கிய அனுமதி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 468 CrPC, படி ஏற்புடையதல்ல. ஏனெனில் இது போன்ற குற்றத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் பதினான்கு ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு வழக்கு விசாரணைக்கு அனுமதி வழங்கியது நியாயமற்றது.

2010 ஆண்டு காஷ்மீர் கருத்தரங்கில் பேசிய பேச்சு தேச நலனுக்கோ பொது அமைதிக்கோ எதிரானதல்ல.ஆனால் தற்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் இந்த விசாரணை அனுமதியைத் துணை நிலை ஆளுநர் வழங்கியுள்ளார்.

ஒரு வளர்ந்த சனநாயக சமூகம் சுதந்திரமான கருத்து உரிமையை இது போல் சட்டங்களைப் பயன்படுத்தி அடக்கக் கூடாது.

எனவே எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் ஷேக் செளகத் உசைன் மீது போடப்பட்ட UAPA மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு வழக்கு மற்றும் வழக்கு நடத்தக் கொடுத்த அனுமதி ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.

இவண்
கவிதா சீரிவச்சவா
தலைவர்.
முனைவர். வீ. சுரேஷ்
பொதுச் செயலாளர்
மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL)

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response