370 தமிழர் வீடுகளை இடித்துத் தள்ளிய பாஜக – சிபிஎம் ஆம் ஆத்மி கட்சிகள் கண்டனம்

தென்கிழக்கு டெல்லியில் உள்ள பாராபுல்லா கழிவு நீர்க் கால்வாய் அருகே ஜங்க்புராவில் மதராசி முகாம் என்ற பெயரில் குடிசைப் பகுதி அமைந்துள்ளது. இங்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பாரபுல்லா கழிவு நீர்க் கால்வாய் அடைப்பைச் சரி செய்ய வேண்டி இருப்பதால் மதராசி முகாம் கட்டிடங்களை இடித்துத் தரை மட்டமாக்க டெல்லி அரசு முடிவு செய்தது.

இது தொடர்பாக அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டது. இதனை எதிர்த்த இப்பகுதி மக்கள், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், வீடுகளை ஜூன் 1 ஆம் தேதிக்குள் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் 370 குடும்பத்தினரில் 189 பேர் மட்டுமே தகுதியுடையவர்கள் என்று கூறி அவர்களுக்கு மட்டும் 40 கிமீ தூரத்தில் உள்ள நரேலாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.அந்த வீடுகளிலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை.மற்றவர்களுக்கு வீடு ஒதுக்க கூட மறுத்துவிட்டனர்.ஜங்க்புரா மதராசி முகாம் பகுதியில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருபவர்கள். 40 கிமீ தூரம் சென்றுவிட்டால் வீட்டு வேலைக்கு வரமுடியாது என்பதால் அருகிலேயே மாற்று இடம் தர வேண்டும் அல்லது வீடுகளை இடிக்கும் பணியைக் கைவிட வேண்டும் என்று டெல்லி பாஜக முதல்வர் ரேகா குப்தாவிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், வீடுகளை இடிப்பதிலேயே அரசு நிர்வாகம் தீவிரமாக இருந்தது. மதராசி முகாம் குடியிருப்புகளை நேற்று புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. டெல்லி பொதுப்பணித்துறை, டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டன.

பல ஆண்டுகளாக வசித்து வந்த தங்கள் வீடுகள் இடிக்கப்படுவதைப் பார்த்து தமிழர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். உரிய மாற்று ஏற்பாடு செய்யாமல் வீடுகளை இடித்துத் தரை மட்டமாக்கிய டெல்லி பாஜக அரசுக்கு குடியிருப்புவாசிகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மியின் டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில்,

மதராசி முகாம் குடியிருப்புகள் இடித்து தரைமாக்கப்பட்டுள்ளன. டெல்லி முதல்வர் குடிசைப்பகுதி மக்களை அகற்ற மாட்டோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.ஆனால், தற்போது ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். புல்டோசர்களை கொண்டு பாரபுல்லா மதராசி முகாம் அகற்றப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இந்த நிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பாஜக தமிழ்நாட்டில் ஓட்டு கேட்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஜங்புரா பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். வீட்டை இழந்து சாலையோரத்தில் அமர்ந்திருந்த மூதாட்டி ஜானகி கூறுகையில், ‘நான் கடந்த 60 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறேன்.என் குழந்தைகள் இங்குதான் பிறந்தார்கள். எல்லாம் இங்கேயே நடந்தது. இப்போது, நாங்கள் சாலையில் அமர்ந்திருக்கிறோம். எங்கு செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.

மற்றொரு பெண் சுமதி கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக நான் இங்குதான் வசித்து வருகிறேன்.பல தலைமுறையினர் இங்கு வசித்து வருகின்றனர்.எனது மகள் கர்ப்பமாக இருக்கிறார். எங்களுக்கு வீடுகள் கொடுப்பதாகக் கூறினார்கள். ஆனால்,வீடுகள் கொடுக்கவில்லை என்றார் கண்ணீருடன்.

மற்றொரு குடியிருப்புவாசி சாந்தி கூறுகையில், இங்கு வாழ்ந்து வரும் பலரும் இங்குதான் வேலை செய்கிறார்கள்.அவர்களுக்கு வாழ்வாதாரமும் இது தான்.இங்குள்ள 150-160 பேருக்கு மட்டுமே குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.நாங்கள் எங்கே போவது?எங்கே வாழவது? என்று தெரியவில்லை? என்றார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் போராடி வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: சுமார் 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. இதில் 189 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் 40 கி.மீ. தொலைவில் உள்ள நரேலா பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. புதிய வீடுகளில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. குடிநீர், மின்சார வசதிகூட இல்லை. அந்த இடத்தில் எப்படி வாழ முடியும்?

சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம், வீடுகள் ஒதுக்கப்படவில்லை. அவர்கள் எங்கு செல்வார்கள்?. டெல்லியில் ஆளும் பாஜக அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

டெல்லி ஊரக குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் கூறும்போது, “டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு உள்ளன. இங்கு வசித்தவர்களில் 189 குடும்பங்களிடம் மட்டுமே போதிய ஆதாரங்கள் உள்ளன. அவர்களுக்கு மட்டும் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன” என்று தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…

டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு அருகில் தமிழர்கள் வசித்த மதராசி கேம்ப் பகுதியில் 370 வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன.தமிழ்நாடு முதலமிச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அலுவலகம் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மதராசி கேம்ப் பகுதியில் வசித்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும்.

வீடுகளை இழந்த மக்கள் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்ப விரும்பினால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான அடிப்படை உதவிகள் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response