ஆந்திர மாநிலக் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசுக் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசைக் கண்டித்து டெல்லியில் உள்ள ஜந்தர்-மந்தர் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதில் அவரது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது ஜெகன் மோகன் பேசியதாவது….
ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்கெட்டு விட்டது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு, எதிர்க்கட்சியினருக்கு எதிராக பழி வாங்கும் செயலில் ஈடுபடுகிறது. சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான லோகேஷ், ‘ரெட் புக்’ கில் உள்ள எதிர்க்கட்சியினரைப் பழி வாங்குவேன் என மிரட்டுகிறார். நாங்கள் ஆட்சியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று பழிவாங்கும் அரசியலில் ஈடுபட வில்லை. அக்கட்சி ஆட்சிக்கு வந்த 45 நாட்களிலேயே எங்கள் கட்சியைச் சேர்ந்த 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அரசு, தனியார் சொத்துகள் நாசம் செய்யப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் ஜனநாயகம் உள்ளதா? எனும் கேள்வி எழுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜெகன்மோகன் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.
அவர் பேசியதாவது….
ஆந்திராவில் நடக்கும் அராஜகத்தின் புகைப்படங்கள், வீடியோ பதிவுகளைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன். இவை திட்டமிட்டுச் செய்யும் செயல். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் செயல்களுக்கு ஒன்றிய அரசும் இலைமறை காயாக உதவுகிறது.
ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும். நாங்கள் ஜெகன் கட்சிக்கு உறுதுணையாக நிற்போம். சட்டம்-ஒழுங்கை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெகன்மோகன் இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும். இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஜெகனுக்கு ஆதரவு தர முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜெகன் மோகனின் இந்தப் போராட்டத்துக்கு உபியின் சமாஜ்வாதி கட்சி,மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரசு, தமிழ்நாட்டின் அதிமுக, விசிக,டெல்லியின் ஆம் ஆத்மி,மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
ஜெகன்மோகன் கட்சிக்கு மாநிலங்களவையில் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர். ஏற்கெனவே மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத அரசாக மோடி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி அரசு உள்ளது.
மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்ததும் அவருக்கு ஒய் எஸ் ஆர் கட்சி ஆதரவளித்தது.இப்போது ஜெகன்மோகனின் போராட்டத்துக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இதைத் தொடர்ந்து ஜெகன்மோகனின் ஆறு உறுப்பினர்களும் மோடி அர்சுக்கு எதிரானால் மேலும் சிக்கல்தான் என்கிறார்கள்.இதனால் பிரதமர் மோடி கவலை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.