
இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன்
‘இந்தியாடுடே – சி வோட்டர்’ அமைப்பு நடத்திய’மூட் ஆஃப் தி நேஷன்’கருத்துக்கணிப்பில்,தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள 25,184 நபர்களிடம் நேரடியாகவும்,கடந்த ஆறுமாதங்களில் எடுக்கப்பட்ட 91,795 பேட்டிகளின் அடிப்படையிலும் சி வோட்டர் நிறுவனம் இந்த ஆய்வு முடிவுகளைத் தயாரித்துள்ளது.(விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றே மூன்று மாதங்கள் ஆகிறது.அதற்கு முன்பே அவரை பிரதமர் வேட்பாளர் போட்டியில் சேர்த்திருக்கிறார்கள்)
இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி,பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீத வாக்குகளுடன் முதலிடத்திலும், காங்கிரஸ் மூத்ததலைவர் இராகுல்காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.அவர்களைத் தொடர்ந்து 9.2 சதவீத வாக்குகளைப் பெற்று விஜய் மூன்றாவது இடத்தை அடைந்துள்ளார்.இதன்மூலம் மம்தா பானர்ஜி (2%),அகிலேஷ் யாதவ் (1.7%),அர்விந்த் கேஜரிவால் (1.2%) உள்ளிட்ட முக்கியத் தேசியத்தலைவர்களை அவர் முந்தியுள்ளார்.
மேலும்,எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்கச் சிறந்த தலைவர் யார் என்ற வினாவிற்கும் 12.2 சதவீத ஆதரவுடன் ராகுல் காந்திக்கு (29%) அடுத்தபடியாக விஜய் இரண்டாவது இடத்தைப் பெற்று,மம்தாபானர்ஜி (8.5%),கேஜ்ரிவால் (7.5%),அகிலேஷ் யாதவ் (6.9%) ஆகியோரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
தமிழக வெற்றித் கழகம் 2026 இல் ஆட்சியைப் பிடித்தது முதலே 2029 மக்களவைத் தேர்தலில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் எண்ணம் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தது.சமீபத்தில் தமிழக சட்டமன்றத்திலும் தவெக அமைச்சர்களான சரத்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விஜய்யின் தேசிய அரசியல் வருகை குறித்தும் தென்னகத்திலிருந்து ஒரு பிரதமர் உருவாவது குறித்தும் தெரிவித்த கருத்துகள் இந்த ஆய்வின் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளன.
2024-ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி,2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே,தேசியஅரசியலில் களமிறங்கிச் செயல்படும் மூத்த தலைவர்களைப் பின்னுக்குத்தள்ளி விஜய் இந்த இடத்தை எட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது என்று பரப்புரை செய்யப்படுகிறது.


