காங்கிரசு செய்த தவறை பாஜகவும் செய்கிறது – சி.வி.சண்முகம் வெளிப்படை

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று சமூகநீதித் துறை,பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாத விவரம்….

ஜெயங்கொண்டம் தொகுதி உறுப்பினர் வைத்திலிங்கம் (பாமக)…தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளன என்பதை தமிழக அரசு விளக்கவேண்டும்.

அமைச்சர் சம்பத்குமார்: 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கில் இந்தச் சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டது.அதற்கான அப்பீல் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது.அந்தவழக்கில்,உள் இடஒதுக்கீடு சட்டத்திற்கு போதிய அளவு தரவுகள் இல்லை என மாநில அரசு குறிப்பிடப்பட்டிருந்தது.

சி.வி.சண்முகம் (அதிமுக): ஒரு சதி உருவாகியுள்ளது.ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்தபிறகு,தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அரசு கூறுகிறது.மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதி தொடர்பான 40 கேள்விகள் உள்ளன.அதன்படி மக்கள் பதிலளித்தால்,அது சாதிப்பட்டியலில் வராது.ஏனென்றால்,சாதியின் உள்பிரிவுகளை நாமாகவே முன்வந்து சொல்லவேண்டும்.ஒவ்வொரு உட்பிரிவும் தனி சாதியாகக் கணக்கிடப்படும் ஆபத்து உள்ளது.ஒரு சாதிக்கு வேறு இடத்தில் வேறு பெயர் இருந்தால் அதை ஒரே சாதியாக எப்படிக் கணக்கிட முடியும்? இப்படி கணக்கெடுப்பு நடத்தியதால் 1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு சாதிகளின் எண்ணிக்கை ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது.
இந்த விசயத்தில் காங்கிரசுக் கட்சி செய்த அதே தவறை பாஜக அரசும் செய்கிறது.ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்தபிறகு சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கலாம் என்றால் அது முடியாது.அவர்கள் மக்கள்தொகையுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பை வெளியிட மாட்டார்கள்.ஒன்றிய அரசிடம் 181 இதர பிற்படுத்தப்பட்டோர் சாதிப்பட்டியல் உள்ளது.மாநில அரசிடம் 252 பிற்படுத்தப்பட்டோர் சாதிப்பட்டியல் உள்ளது. மாநிலஅரசின் பட்டியலை வைத்து தமிழக அரசே சாதிவாரியான கணக்கை எடுக்கவேண்டும்.உள் ஒதுக்கீடு கொடுக்க மாநிலஅரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.ஆனால் முதலில் அந்த சாதிக்கான புதியதரவுகளை எடுங்கள் எனக் கூறியிருந்தது.
ஆனால்,சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கடந்த அரசு சொல்லிவிட்டது. எனவே இந்த அரசு,ஒன்றிய அரசுக்காகக் காத்திருக்காமல்,மற்ற மாநிலங்களைப் போல் சாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழக அரசே எடுக்கவேண்டும்.

திமுக கொறடா எ.வ.வேலு: சாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றியஅரசு மட்டும்தான் எடுக்கமுடியும்.இதனால்தான் ஒன்றியஅரசுக்கு திமுக அரசு கடிதம் எழுதி,சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தது.மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு சேர்த்து நடத்தவேண்டும் என சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் எடுப்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தேர்தல் நேரத்தில் அவசரமாக அப்போதிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.ஆனால்,அதற்கு சட்டப்பாதுகாப்பு இல்லை.எனவேதான் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று வழக்குகளை நடத்தினோம்.எனவே 10.5 சதவீத இடஒதுக்கீட்டைத் தரவேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.அதற்கு முழுஒத்துழைப்பு தருவோம்.

சி.வி.சண்முகம்(அதிமுக):இஸ்லாமியர்களுக்கும்,அருந்ததியர்களுக்கும் உள்ஒதுக்கீட்டை வழங்கிய திமுக அரசு ஏன் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்க முடியவில்லை? கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றியஅரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றால்,எந்த அடிப்படையில் அவர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுத்தீர்கள். உங்களுக்குச் செய்வதற்கு மனமில்லை.10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது அதிமுக.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (திமுக):தேர்தல் நேரத்தில் அவசரமாக அதிமுக கொண்டு வந்த இடஒதுக்கீடு அது. அதைச் செய்வதற்கு திறமை உண்டு,மனமும் உண்டு.தவறான வார்த்தைகளைப் பேசவேண்டாம்.

அமைச்சர் ஷாஜகான்:இஸ்லாமியருக்கு 3.5 சதவீத உள்ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை,2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது இஸ்லாமியர்கள் 5.86 சதவீதம் இருந்தனர்.அதில் உள்ள 7 உட்பிரிவுகளும் அடங்கியதன் காரணமாக அதனடிப்படையில் கொடுக்கப்பட்டது.

வைத்திலிங்கம் (பாமக): நீதிமன்றத்தில் வன்னியர்கள் குறித்த தரவுகள் கேட்டார்கள் என்றால்,கடந்த 5 ஆண்டுகளில் அந்தத் தரவுகளைக் கொடுத்திருக்கலாமே.

திமுக கொறடா எ.வ.வேலு:அந்தத் தரவுகளை எடுப்பதற்காக கடந்தஆட்சியில் குழு அமைக்கப்பட்டு இருந்தது.

கணேஷ்குமார் (பாமக): அந்த அறிவிப்பை அவசரகதியில் கொண்டு வரவில்லை.வன்னியர்கள் எப்படியெல்லாம் பின்தங்கியுள்ளனர் என்பதைப்பற்றிய தரவுகளைத்தான் கேட்டனர்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்: கணக்கெடுப்புதான் சரியான தீர்வு என கோர்ட் கூறியிருந்தால் அதைத்தான் கடந்த அரசு செய்திருக்கவேண்டும்.இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.எனவே புதிய அரசு,முதல்வர் இதில் நல்ல முடிவெடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave a Response