
தில்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரசு மூத்ததலைவருமான இராகுல்காந்தி, பிரதமர் நரேந்திரமோடியையும்,உள்துறை அமைச்சர்
அமித்சாவையும் கடுமையாக விமர்சித்தார்.
அங்கு இராகுல்காந்தி பேசியதாவது….
நீங்கள் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகப் போராடும்போது எனக்கு சற்று பயமாக இருக்கிறது என்று சொன்னால் அதை என்னால் புரிந்துகொள்ள முடியும்.ஆனால்,நீங்கள் ஒரு கோமாளிக் கூட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறீர்கள்.இதில் எப்படி உங்களுக்கு பயம் வரமுடியும்? இவர்களுக்கு இந்தியா பற்றிய எந்தப்புரிதலும் இல்லை.இது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான்.ஏனென்றால்,இன்றைய இந்தியாவோடு ஒன்றிணைந்து செயல்பட முடியாத ஒருவரால் இந்தியாவைப் புரிந்துகொள்ள முடியாது.
இந்தியாவைப் புரிந்துகொள்ள 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவை மட்டும் பார்த்தால் போதாது.இன்றைய இந்தியாவை,இந்த தருணத்தில் உள்ள இந்தியாவைப் புரிந்துகொள்ள வேண்டும்.இன்றைய இந்தியாவை புரிந்துகொள்வதற்கான ஒரேவழி,அது வெளிப்படுத்துவதை புரிந்துகொள்வதுதான்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு பெருநிறுவன சக்திகளால் கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்போதோ மறைந்துவிட்டது.உண்மையில் ஆர்எஸ்எஸ் என்பது,சிறுவணிகர்கள்,பொற்கொல்லர்கள், நகை வியாபாரிகள் ஆகியோரின் குரலாகத்தான் இருந்தது.அதுதான் ஆர்எஸ்எஸ்.அந்த ஆர்எஸ்எஸ் அழிந்துவிட்டது.ஓர் உண்மையான சக்தியாக ஆர்எஸ்எஸ் இறந்துவிட்டது.இப்போது அது பெருநிறுவன மூலதனத்தின் ஒரு கருவியாக மட்டுமே உள்ளது.
எங்கள் பணி மிகவும் எளிமையானது.நாங்கள் அவர்களை நிலைகுலையச் செய்யமுடியும்.நரேந்திரமோடிக்கு இரவில் தூக்கம் வருவதில்லை.அதற்குப் பல காரணங்கள் உள்ளன.வெளிப்படையான காரணம் ஒன்று உள்ளது. மறைமுகக் காரணங்கள் பல உள்ளன.
சாணக்கியர் என்றும்,சர்தார் படேல் என்றும் அவர்கள் அமித்சாவை அழைத்தார்கள்.ஆனால்,அந்த அமித்சாவால் 20 நாட்களாக நாடாளுமன்றத்துக்கு வரமுடியவில்லை.ஏனென்றால்,அவர்கள் முதன்முறையாக இந்தியாவின் குரலையும் வெளிப்பாட்டையும் உணர்கிறார்கள்.அதோடு,இந்தநாடு இனி தனது கருத்துகளை வெளிப்படுத்துவதை நிறுத்தாது என்பதை அவர்கள் இப்போது உணர்ந்துவிட்டார்கள்
ஜந்தர்மந்தரில் என்ன நடந்தது? மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த விரும்பினர்.அவர்கள் மிகுந்த வேதனையில் இருந்தனர்.தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றனர்.ஆனால்,அரசாங்கமோ,ஜந்தர்மந்தரில் நாங்கள் ஒரு ஒழுங்கை நிலைநாட்டப் போகிறோம்.நீங்கள் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்த முடியாது என்று கூறியது.
இன்று ஒரு பெண் என்னைச் சந்தித்தார்.நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உத்தராகண்ட்டில் அவரது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.அவர் அழுதுகொண்டே தனது துயரத்தைப் பகிர்ந்துகொள்ள முயனறார்.ஆனால்,அதிகார அமைப்போ,நீங்கள் உங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள அனுமதிக்க மாட்டோம். ஏனெனில்,நீங்கள் அவ்வாறு செய்தால் அது ஒழுங்கின்மையை உருவாக்கும் என்று கூறியது.
இந்தியா மீது ஒரு குறிப்பிட்ட ஒழுங்கைத் திணிப்பதே அவர்களின் பணியாகவும் அரசியல் தத்துவமாகவும் உள்ளது. அந்த ஒழுங்கு அவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவான ஒருசில நபர்களுக்கும் மட்டுமே பயனளிப்பதாக இருக்கிறது. ஆனால்,இந்தியா தனது கருத்துகளை வெளிப்படுத்த வைப்பதும்,அந்த ஒழுங்கை உடைப்பதுமே எங்கள் பணி
இவ்வாறு அவர் பேசினார்.


