
ஜூலை 28 ஆம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கன அடி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.ஆனால்,நீர் திறக்கப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தின் 140 ஆவது கூட்டம் டெல்லியில் அதன்
தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் தரப்பில்,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்
மாதங்களில் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை மாதவாரியாக முறையாக வழங்கவில்லை.இதனால் மேட்டூர் அணையில் பாசனத்துக்காகத் திறக்கும் அளவுக்கு நீர் இருப்பு இல்லை.ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்கிறது.எனவே கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிலுவைநீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதற்கு கர்நாடக அரசின் தரப்பில்,கர்நாடகாவில் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் கிருஷ்ணராஜசாகர்,கபினி,ஹாரங்கி,ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு போதிய நீர் வரவில்லை.கடந்த
இருவாரங்களாகக் கணிசமாக மழை பொழிந்ததால் கபினி,ஹாரங்கி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை
நெருங்கியுள்ளன.தற்போது கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளிலும் சேர்த்து 77.746 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது.இந்த அளவானது கடந்த 30 ஆண்டுகளில் இருந்த நீரின் அளவைவிட 47 சதவீதம் குறைவானது. இந்தநிலையில் தமிழகத்துக்கு நிலுவைநீரை முழுவதுமாக திறக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர்,உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்குக் காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா முன்வரவேண்டும்.தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 12 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும்.இதனை ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 8 மணி முதல் இரு மாநில
எல்லையான பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு நீர் செல்வதை உறுதி செய்யவேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இந்நிலையில்,காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்,அதன் தலைவர் ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.அப்போது, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.
இம்முறையாவது ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் மதிக்குமா? என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.


