விலைவாசி உயர்வு இலஞ்சம் ஊழல் கொலை கொள்ளை – எடப்பாடி கடும் தாக்கு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்….

தமிழ்நாட்டில் கடும் மின்வெட்டு நடைமுறையில் இருந்தும்,அமைச்சர் இல்லை என்கிறார்.மின்வெட்டு இல்லையென சொல்லிக்கொண்டு மின்சாரப் பற்றாக்குறையை ஈடு செய்ய 2,000 மெகாவாட் மின்சாரம் வெளியிலிருந்து வாங்குவதாகவும் அமைச்சர் கூறுகிறார்.மின்வெட்டு இல்லையென்றால் எதற்காக வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கவேண்டும்.

தமிழகத்தில் இரவில் மின்வெட்டால் மக்கள் தூக்கம் தொலைத்ததற்கு தமிழக தவெக அரசுதான் காரணம்.ஒரு யூனிட் மின்சாரம் ரூ.30 விலை கொடுத்து வாங்கப்படுகிறது.நிர்வாகத் திறமையற்ற,அனுபவமற்ற அரசு என்பதால் இந்த மின்வெட்டு பிரச்னை ஏற்படுகிறது.கோடைக்காலங்களில் அதிகாரிகளை முன்கூட்டியே அழைத்துப்பேசி தேவைக்கேற்ப மின்கொள்முதல் செய்திருந்தால் தடையில்லா மின்சாரம் வழங்கியிருக்கலாம்.தென்காசி மாவட்டத்தில் மெழுகுவர்த்தி,தீப்பந்தம் பிடித்தபடி விவசாயிகளின் போராட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது.தென்காசி மாவட்டத்தில் வயதான பஞ்சு வியாபாரியை காரில் கடத்தி,சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.தவெக ஆட்சிக்கு வந்தபிறகு,கொள்ளை,கொலை,பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை.மோசமான ஆட்சி நடக்கிறது.விவசாயிகள்,செவிலியர்,மருத்துவர்,தூய்மைப் பணியாளர்கள் என பலரும் போராட்டம் நடத்துகின்றனர்.ஆட்சிக்கு வந்து நான்கே மாதத்தில் இவ்வளவு போராட்டங்கள்.

உணவுப்பொருட்கள் 25 சதவீதம் வரை அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.நடுத்தர மக்களுக்கான பாதிப்பை சரிசெய்ய இந்த அரசு முன்வரவில்லை.வெறும் ரீல்ஸ் அரசாக உள்ளது.தவெக ஆட்சி அமைந்த பிறகே அதிகளவில் ஊழல் நடக்கிறது.முன்பு கொடுத்ததை வாங்கினார்கள்.இப்போது டிமாண்ட் செய்து வாங்குகிறார்கள். எங்களது வீடுகளில் இலஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி பிரயோஜனம் இல்லை.தவெகவினர் வீடுகளில் சோதனை நடத்தவேண்டும்.

இரு தொகுதி இடைத்தேர்தலிலும் நாங்களும்,திமுகவும் போட்டியில் இருக்கிறோம்.அப்படி இருக்கும்போது எப்படி கள்ளஉறவு என்று சொல்லமுடியும்? தவெகவினருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.கடந்தகால திட்டங்களுக்கு வெற்றி என பெயர் சூட்டுகின்றனர்.தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய அறிவிப்புகள் ஏதுமில்லை. தேர்தல் நேரத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றாதது மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளது.தவெக அரசு ஆட்சிக்கு வந்து தற்போது வரை ரூ.40 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளனர்.இந்தச்சூழலில் புதிய தலைமைச்செயலகம் கட்டவேண்டிய அவசியம் என்ன?

இரு இடைத்தேர்தல்களுமே திணிக்கப்பட்ட தேர்தல்கள் என தவெக ஆட்சிக்கு வரத் துணைநின்ற கட்சிகளே சொல்கிறது.குதிரைபேரம் மூலம் விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து,மீண்டும் தேர்தலில் போட்டியிட வைக்கிறார்கள்.மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகச் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.இத்தேர்தல் மூலமாக மக்கள் தவெகவிற்கு பாடம் புகட்டுவர்.இடைத்தேர்தலில் பாமகவுடன் கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இலண்டன் சென்ற முதல்வர் விஜய்,தொழில்துறை அமைச்சர், துறைச் செயலாளரை அழைத்துச் செல்லவில்லை.அழைத்துச் சென்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் சம்பந்தமில்லாத அதிகாரிகளுடன் சென்றுள்ளார்.தமிழ்நாட்டில் சுமார் 32 இடங்களில் உள்ள மதர்சன் நிறுவனத்திற்கு,சென்னையில் அலுவலகமும் இருப்பதாக தெரிகிறது.

ஆனால்,இந்நிறுவனத்துடன் முதல்வர் இலண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாகச் செய்தி வந்துள்ளது. இந்தியாவில் அலுவலகம் இருக்கும்போது,இலண்டனுக்குச் சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது ஏன்? தொழில் முதலீட்டை ஈர்க்கச் சென்றாரா அல்லது இன்பச் சுற்றுலா சென்றாரா?.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது,மக்கள் பிரச்னை குறித்து எதுவும் பேசவில்லை.ஒரு நாளைக்கு 10 மணிநேரத்தில்,7 மணிநேரம் சட்டசபையின் நேரம் வீணடிக்கப்பட்டது. ஆக்கப்பூர்வமான விவாதமின்றி,மக்கள் எள்ளிநகையாடும் அளவிற்கு சட்டமன்ற நிகழ்வு நடந்துள்ளது.சினிமாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் போல்தான் சட்டமன்றத்தை மக்கள் பார்த்தார்கள்.

சர்க்காரியா கமிஷன் குறித்து பேசுகிறார்கள்.அப்போது முதல்வர் விஜய்யே பிறக்கவில்லை.இப்போது அதுகுறித்து எதற்கு பேசவேண்டும்? நேரத்தை வீணாகக் கழிக்கிறார்களே தவிர,ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்கவில்லை. சபாநாயகர் நடுநிலையாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.நேரலையில் மக்கள் பார்க்கிறார்கள் அவர்களுக்கே தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response